பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கெளரவமாகவே மதிக்கப்பட்டபடியால், தம் வீட்டுச் செலவுகளுக்காக அவர் பலபேரிடம் பற்றுச் சீட்டுக் கொடுத்துக் கடன் வாங்கினார். உண்டியல் கடன் பத்திரங்கள் பலவற்றில் கையெழுத்துப் போட்டுப் பணம் வாங்கினார். அவர் ஒரே ஒரு பொருளையே ஈடு வைத்து அதன் மேல் பல தடவை பலபேரிடம் பணம் வாங்குவதை அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் சீக்கிரம் கண்டுபிடித்து விட்டார்கள். அவருடைய நிலைமை இந்த மாதிரி மோசமாக இருக்கும்போதே, கீழ்த்திசையிலிருந்தும் செய்திகள் கிடைத்தன. சீமாட்டி ஹானெஸ்டாவின் சகோதரர்களில் ஒருவன், தான் வியாபாரம் செய்யக் கொண்டு போன பணம் முழுவதையும் சூதாடித் தோற்றுவிட்டான்! மற்றொருவன் ஒரு கப்பல் நிறைய இன்சூர் பண்ணாமல் சரக்கேற்றிக் கொண்டு வந்து, அந்தக் கப்பலோடு கடலில் மூழ்கிப் போய்விட்டான். இந்தச் செய்தி நகரில் பரவிய உடனே, ரோடெரிக்கின் கடன்காரர்கள் ஒன்றாகக் கூடி அவர் திவாலாகிவிட்டதாக முடிவு செய்தார்கள். இருந்தாலும் அவரிடமிருந்து இன்னும் பாக்கி வசூல் பண்ணாததால் தங்கள் சந்தேகங்களை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், அவரையும் அவருடைய நடவடிக்கைகளையும், இரகசியமாய்க் கவனித்து வருவதென்று தீர்மானித்தார்கள். இதனால் ரோடெரிக் பிரபு இரகசியமாக அந்த ஊரை விட்டுத் தப்பியோடவும் முடியாமல் இருந்தது. கடைசியில் அவர் என்ன நேர்ந்தாலும், தப்பியோடி விடுவதென்று முடிவுக்கு வந்தார்.

ஒருநாள் காலை அவர் குதிரையொன்றின்மீது ஏறிக்கொண்டு தம் மாளிகையருகில் இருந்த பிராட்டோ வாசல் வழியாக நகரை விட்டு வெளியேறினார். இந்தச் செய்தியை அறிந்தவுடன், கடன்காரர்கள் ஒரேயடியாகக் கூச்சலிட்டு, வழக்கறிஞர்கள் மூலமாக நியாயாதிபதிகளிடம் முறையிட்டுக் கொண்டார்கள். அதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் எதிர்ப்பையும் கிளப்பி விட்டு, ரோடெரிக் பிரபுவை விரட்டிக் கொண்டு வந்தார்கள். ரோடெரிக் பிரபு ஊரை விட்டு ஒரு மைல் தூரம் கூடப் போயிருக்கமாட்டார். அதற்குள் பின்னால் ஏற்பட்ட கூச்சலையும் கூக்குரலையும் கேட்டு நிலைமையைப் புரிந்துகொண்டார். அவர்களிடமிருந்து தப்ப இரகசியமாகச் சென்றால்தான் முடியும் என்று வீதிப் பாதையை விட்டு விலகி வயல் வெளிகளுக்குள்ளே புகுந்து செல்லத்