பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

தொடங்கினார். ஆனால், வழியில் பல குழிகளையும் வரப்புக்களையும் கடக்க வேண்டியிருந்ததால் அந்தப் பாதையில் குதிரையேறிச் செல்வது கடிதாக இருந்தது. எனவே, அவர் கால்நடையாகக் கிளம்பினார். வயல் வயலாகக் கடந்து, கடைசியில் பெரிட்டோலா என்ற ஊர்ப் பக்கம் ஜீயான் மாட்டியோ என்ற ஒரு தொழிலாளியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அப்போது அதிர்ஷ்டவசமாக அந்தத் தொழிலாளியே தன் மாடுகளுக்குத் தீனி எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான். ரோடெரிக் பிரபு அந்த மனிதனிடம் அடைக்கலம் புகுந்தார். தன்னைப் பிடித்துச் சிறையிலடைத்துக் கொல்வதற்காக விரட்டிக் கொண்டு வரும் பகைவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் படியும், அவ்வாறு செய்தால், அவனைத் தான் பணக்காரனாக்கி விடுவதாகவும், அதற்குரிய அத்தாட்சிகளைத் தான் போகுமுன் காட்டிவிட்டுப் போவதாகவும், அல்லது செய்யத் தவறினால் அவனே தன்னைத் தன் பகைவரிடம் காட்டிக் கொடுத்து விடலாமென்றும் உறுதி கூறி வேண்டிக் கொண்டார். ஜீயான் மாட்டியோ சாதாரண விவசாயியாக இருந்தபோதிலும் தைரியமுள்ளவன். அவன் அவரைக் காப்பாற்றுவதாக உறுதி கூறினான். அவன் ரோடெரிக் பிரபுவை ஒரு குப்பை மேட்டுக்குள்ளே தள்ளி அவர்மீது குப்பைகளைக் கொட்டி மூடினான்.

ரோடெரிக் இவ்வாறு மூடி மறைக்கப்பட்ட நேரத்தில், அவரை விரட்டிக்கொண்டு வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் விவசாயியை எவ்வளவோ அச்சுறுத்திக் கேட்டபோதிலும், அவன் அவரைப் பார்த்தானா பார்க்கவில்லையா என்ற விஷயத்தையே தெரிந்துகொள்ள முடியவில்லை. அன்றும் மறுநாளும் தேடியலைந்து விட்டுப் பயனில்லாமல் அலுத்துப்போய் அவர்கள் பிளாரென்சு பட்டணத்திற்குத் திரும்பிவிட்டார்கள். அவர்கள் போன பிறகு, குப்பைக் குழியிலிருந்து ரோடெரிக் பிரபுவை வெளிப்படுத்தி, அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொண்டான் விவசாயி.

“அன்புள்ள சகோதரனே! நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டவன். நான் உன்னைப் பூரணத் திருப்தியடையச் செய்ய விரும்புகிறேன். நான் இந்த விஷயத்தில் ஆற்றல் உடையவன் என்பதை நீ நம்புவதற்காக நான் யார் என்பதை