பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

சமயத்தில் விவசாயி ஜியான்மாட்டியோ அங்கு வந்தான். பெர்ட்டோலாவில் ஒரு நிலம் வாங்குவதற்காகத் தனக்கு 500 பிளாரின் பணம் தந்தால், அந்தப் பெண்ணைக் குணப்படுத்துவதாக அவன் உறுதி கூறினான். அம்புரூலோஜியோ ஒப்புக்கொண்டார்.

ஜீயான் மாட்டியோ, முதலில் தந்திரமாகச் சில மந்திரங்களையும் சடங்குகளையும் செய்து காட்டினான். பிறகு மெல்ல அந்தப் பேய் பிடித்த பெண்ணின் காதில் வாயை வைத்து, “பூதகனத் தலைவரே! தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் இங்கு வந்தேன்” என்று சொன்னான். “நல்லது, ஆனால், இந்தப் பணத்தால் நீ பெரிய பணக்காரனாகிவிட முடியாது. ஆகவே, நான் இந்தப் பெண்ணை விட்டு நீங்கியபின் நேப்பிள்ஸ் மன்னர் சார்லஸ் பெருமானின் குமாரியைப் போய்ப் பிடித்துக் கொள்கிறேன். நீ வரும் வரை நான் அவளை விட்டு அகலமாட்டேன். அங்கே நீ பெருத்த வெகுமதி பெற்றுப் பெரும் பணக்காரனாகி விடலாம். அதன் பிறகு நீ என்னைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை” என்று சொன்ன ரோடெரிக் பிரபு அந்தப் பெண்ணை விட்டு நீங்கிச் சென்றார். பிளாரென்ஸ் பட்டணம் முழுவதும் வியப்பில் ஆழ்ந்தது.

நேப்பிள்ஸ் மன்னர் சார்லஸின் குமாரிக்குப் பேய் பிடித்தது. அந்தத் துன்பத்தைப் பற்றிய செய்தி வெகு சிக்கிரத்தில் இத்தாலி தேசம் முழுவதும் பரவியது. பேய் ஓட்டும் வழி எதுவுமே பயன்படவில்லை. கடைசியில் விவசாயி ஜீயான்மாட்டியோவைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னர், பிளாரென்சு பட்டனத்துக்கு ஆளனுப்பினார். அவன் நேப்பிள்ஸ் நகருக்குச் சென்றான். வழக்கம்போல் இரண்டொரு மந்திரங்களை உச்சரித்துச் சடங்குகளைச் செய்து அவன் அந்தப் பெண்ணைக் குணப்படுத்தினான். ஆனால் இளவரசியை விட்டு பேயான ரோடெரிக் பிரபு நீங்குமுன்னால் அவர் அவனிடம், “ஜீயான்மாட்டியோ! நான் கொடுத்த வாக்குறுதியை இப்போது காப்பாற்றிவிட்டேன். நீ பணக்காரனாகிவிட்டாய். ஆகவே நம் ஒப்பந்தம் இன்றோடு தீர்ந்துவிட்டது. இனிமேல் என்னைச் சந்தித்தால் அது உனக்கு நல்லதல்ல. மீறி என் விஷயத்தில் நீ தலையிட்டால், இப்போது உனக்கு நன்மை செய்த நான் பின்னால் தீமை செய்வேன் எச்சரிக்கை!” என்று சொன்னார்.