பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

அறியச் செய்கிறேன். பார்!” என்று சீ றினார் பேய்த் தலைவர் ரோடெரிக் பிரபு.

விவசாயி ஜீயான்மாட்டியோ அரசரிடம் திரும்பி வந்து, “மன்னர் பிரானே! இது மகாக் கொடிய பிசாசு! இதை என்னால் விரட்ட முடியாது. நான் முன் சொன்னதுபோல் இது எதற்கும் கட்டுப்படாதது. இருந்தாலும் இன்னொரு முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால், அதிலும் முடியாவிட்டால், தாங்கள் என் மீது இரக்கங் காட்டி நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நம் சீமாட்டிச் சதுக்கத்தில் ஒரு மேடையமைக்க வேண்டும். இந்த நகரத்தில் உள்ள பிரபுக்களும் மத போதகர்களும் அமரும்படியான அளவு அது பெரியதாக இருக்கவேண்டும். அந்த மேடையில் பொன்னாலிழைத்த பட்டுத் திரையொன்றைத் தொங்கவிட வேண்டும். அதன் நடுவில் ஒரு பீடம் அமைக்கப்பட வேண்டும். அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மதபோதகர், சிற்றரசர்கள், பிரபுக்கள் எல்லோரையும் தாங்கள் மேடைக்கு அழைத்து வந்து வழக்கம் போன்ற ராஜாங்க ஆடம்பரங்களுடன் அமரச் செய்ய வேண்டும். பொதுப் பிரார்த்தனை செய்து முடித்தபின், பேய்பிடித்த இளவரசியை அங்கு அழைத்து வரவேண்டும். இதற்கிடையில் சதுக்கத்தின் ஒரு மூலையில் குறைந்தது இருபது பேராவது இருந்து, கொம்புகளையும், பேரிகைகளையும், பிறவாத்தியங்களையும் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். நான் என் தொப்பியைத் தூக்கிச் சைகை காட்டியவுடன் அவர்கள் வாத்தியங்களை முழக்கிக் கொண்டே மேடையை நோக்கி வரவேண்டும். இந்த ஏற்பாட்டுடன், வேறு சில இரகசியமான முறைகளைக் கொண்டு அந்தப் பேயை விரட்டி விடலாம் என்று எண்ணுகிறேன்” என்றான்.

அவன் கூறிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படியாக உடனே மன்னர் பிரான் கட்டளையிட்டார். ஞாயிற்றுக் கிழமை காலை பொழுது விடிந்ததும் மேடை முழுவதும் அதிகாரிகளும், சதுக்க முழுவதும் பொதுமக்களும் வந்து நிறைந்துவிட்டார்கள். பொதுப் பிரார்த்தனை நடைபெற்று முடிந்தவுடன், இரண்டு மதகுருமார்களும் பல பிரபுக்களும் சேர்ந்து பேய்பிடித்த இளவரசியை மேடைக்கு அழைத்து வந்தார்கள். அவ்வளவு பிரும்மாண்டமான ஏற்பாடுகளையும், நிறைந்திருந்த மக்கள் கூட்டத்தையும் கண்ட ரோடெரிக் பிரபு, “இந்தக் கோழைப் பயல் என்னதான் நினைத்திருக்கிறான்?”மாக் - 8