பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

இந்தக் காட்சியைக் கொண்டு என்னைப் பயமுறுத்தி விடலாமென்று எண்ணுகிறானா? நான் சொர்க்கலோகத்து ஆடம்பரங்களையும் நரகலோகத்துப் பயங்கரங்களையும் கண்டு பழகிப் போனவன் என்பது இந்தப் பயலுக்குத் தெரியாதா? இருக்கட்டும், இவனைச் சரியானபடி தண்டிக்க வேண்டும்!” என்று தமக்குள் நினைத்துக்கொண்டார்.

விவசாயி ஜீயான்மாட்டியோ, அவர் அருகில் வந்து போய் விடும்படிக் கெஞ்சினான். ஆனால், அவர் “நீ எனன் நினைத்துக் கொண்டாய். இந்த நாடகத்தைக் கொண்டு என்ன செய்ய நினைத்திருக்கிறாய்? இதன் மூலமாக என்னிடமிருந்தும், அரசரின் கோபத்திற்கும் தப்பி விடலாமென்று மனப்பால் குடிக்கிறாயா? அற்ப நாயே! எப்படியும் உன்னைத் தூக்குமரத்தில் ஏற்றுகிறேன் பார்!” என்று ரோடெரிக் பிரபு கூறினார்.

ஒருவர் கெஞ்சிப் பணிய ஒருவர் மிஞ்சிப் பழிக்க இவ்வாறு நேரம் போய்க் கொண்டிருந்தது. இனிக் காலத்தை வீணே கடத்தக் கூடாதென்று எண்ணிய ஜீயான் மாட்டியோ தன் தொப்பியை ஆட்டிச் சைகை காட்டினான். உடனே ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாத்தியக் குழுவினர் விண்ணதிர இசை முழக்கிக் கொண்டு மேடையை நோக்கி நெருங்கி வரத் தொடங்கினார்கள். திடீரென்று எழுந்த அந்தப் பெரும் முழக்கத்தைக் கண்டு, என்ன ஏதென்று புரியாமல் திகைத்துப் போன ரோடெரிக் பிரபு, விவசாயியை நோக்கி, “என்ன நடக்கிறது?” என்று கேட்டார்.

“ஐயோ! என் அன்பிற்குரிய ரோடெரிக்! உங்கள் மனைவி உங்களைத் தேடிக்கொண்டு வருகிறாள்!” என்று அனுதாபப்படும் பாவனையில் சற்றுப் பலமாகவே கூறினான் விவசாயி ஜீயான் மாட்டியோ. தன் மனைவியின் பெயரைக் கேட்டவுடனே ரோடெரிக்கிடம் ஏற்பட்ட அந்தத் திடீர் மாறுதல் பெரிதும் வியப்படையக் கூடியதாயிருந்தது. அவர் பெரும் பீதியும் குழப்பமுமடைந்து, உண்மையில் தம் மனைவி அங்கு வரக் கூடுமா. இந்தச் செய்தி நம்பக் கூடியதுதானா என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல், பதில் கூடச் சொல்லாமல், தாம் பிடித்திருந்த பெண்ணை விட்டுவிட்டுப் பறந்தோடிவிட்டார்.

மறுபடியும் திருமண நுகத்தடியில் சிக்கிக் கட்டுப்பட்டு அதற்குரிய வேதனைகளையும், துயரங்களையும்,