பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


நிக்கியா : என் மனைவி விபசாரியாவதையோ நான் விபசாரியின் கணவனாக இருப்பதையோ நான் விரும்பவில்லை.

கலி : இப்படியா உமது புத்தி போகிறது? நான் உன்னைப் புத்திசாலி என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். பிரான்ஸ் தேசத்து மகாராஜாவும் அவருடைய மந்திரி பிரதானிகளும் கடைபிடித்தவழியைப் பின்பற்ற உனக்கு இவ்வளவு தயக்கமா?

நிக்கியா : இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு யாரை எங்குபோய் பிடிக்க முடியும். மந்திரகோலா மருந்து உட்கொண்ட மங்கையோடு முதன் முதலில் மகிழ்ந்திருப்பவன் எட்டு நாட்களுக்குள் செத்துப் போய்விடுவான் என்று சொன்னீரே. உண்மையைக் கூறினால் எந்த மடையன் இந்த விஷயத்துக்கு ஒப்புக்கொள்வான். என் மனைவி இருக்கும் பக்கமே எட்டிப்பார்க்காமல் ஓடி விடுவானே? உண்மையைச் சொல்லாவிட்டாலும் நான் அவனை ஏமாற்றிக் கொன்றதாகப் போய்விடும். என் கழுத்துக்கும் தூக்குக் கயிற்றை எதிர்பார்க்க வேண்டியதுதான். இந்தத் துன்பம் எல்லாம் நமக்கு வேண்டாம்.

கலி : இதற்குத்தான் கவலைப்படுகிறீரா? பூ! இதெல்லாம் என் பொறுப்பில் விட்டுவிட்டால் போச்சு!

நிக்கியா : நீர் என்ன செய்வீர்!

கலி : சொல்லுகிறேன் கேளும். இன்று இரவு பத்து மணியைப்போல் மந்திரகோலா மருந்தை உம் சம்சாரம் உட்கொள்ளும்படி செய்யும். பிறகு, நான், சிரோ, லிகுரியோ, நீர் ஆகிய நால்வரும் மாறு வேடத்தில் தெருவில் சென்று முதலில் எதிர்ப்படுகிற மடப்பயல் ஒருவனை அப்படியே மடக்கிக் கண்ணை கட்டிக்கொண்டு போவோம். பிறகு அவனைப் படுக்கையில் விட்டு என்ன செய்யவேண்டும் என்பதை அவனிடம் சொல்வோம். அதில் எவ்விதமான தொந்தரவும் இருக்காது. பிறகு, அவனை அதிகாலையில் கிளப்பி மறுபடி கண்ணைக் கட்டி தூரத்தில் எங்காவது விட்டு விட்டு வருவோம். அவனுக்கு வீடு அடையாளம் தெரியாது. உமது மனைவியைக் குளித்து முழுகிச் சுத்தமாயிருக்கச் செய்து அதன் பிறகு நீர் உமது விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்: ஒரு சிறு ஆபத்துக் கூட ஏற்படாது!