பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


காட்சி : 5

(தேவாலயத்தின் முன்னால், மெசர் நிக்கியா பிரபுவும், அவருடைய பத்தினி லுக்கிரிசியாவும் வருகிறார்கள். அப்போது தரகன் லிகுரியோவும் வாலிபன் கலிமாக்கோவும் எதிரில் வருகிறார்கள். அதே சமயம் தேவாலயத்தை நோக்கி மதகுரு டிமோஷியோ சாமியார் வந்து கொண்டிருக்கிறார்)

கலி : ஆண்டவர் உங்களைக் காப்பாராக!

நிக்கியா : வைத்தியரே! இதோ என் மனைவி! கை குலுக்கிக் கொள்ளுங்கள்.

கலி : ஆகா!

நிக்கியா : கண்ணே, லுக்கிரிசியா! இவர்தான் நமக்கு முதுமைக் காலத்தில் ஓர் உதவி கிடைக்க வகை செய்தார். இவருக்கு நீ நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறாய்.

லுக்கிரிசியா : நான் அவருக்கு மிகவும் நன்றியுடைய வளாயிருப்பேன். அவர் இனி எப்போதும் நம் நண்பராக இருக்கட்டும்.

நிக்கியா : ஆண்டவர் உனக்கு என்றும் அருள் புரிவார். அன்பே இந்த வைத்தியரையும் தரகன் லிகுரியோவையும் இன்று நம் வீட்டில் விருந்துண்ண அழைப்போமே!

லுக்கிரிசியா : ஆகா! மெத்த மகிழ்ச்சி.

டிமோஷியோ சாமியார் : ஏழைகளுக்குத் தருமம் செய்ய பணம் கொடுக்கிறீர்களா?

நிக்கியா : குருமகானே. இப்போதே அனுப்புகிறோம். (அப்போது பத்தினியின் தாயார் சோஸ்ட்ராட்டா அம்மையாரும் வருகிறாள்)

டிமோஷியோ சாமியார் : அம்மணி சோஸ்ட்ராட்டா, உங்களைப் பார்த்தால் இளமை திரும்ப வந்ததுபோல் இருக்கிறதே!

சோஸ்ட்ராட்டா : இன்று எல்லோருக்கும் ஆனந்த நாள்! எல்லோருக்கும் மகிழ்ச்சி.