பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

கையாண்டது. ஒரே வார்த்தையில் சொன்னால், ஐம்பது வயதான ஒரு முதிர்ந்த மனிதனாகிய என்னை, இந்தக் கண் கூசும்படியான பிரகாசமுடைய சூரியர்களால் குருடாக்கி விட முடியவில்லை; இந்த முரட்டுத்தனமான போக்கு என்னை அலுப்படையச் செய்ய முடியவில்லை; இந்த இருண்ட இரவுகளால் என்னைப் பயமுறுத்த முடியவில்லை . ஒவ்வொன்றும் எனக்கு எளிதாகத் தோன்றுகிறது. அவளுடைய ஒவ்வொரு விருப்பத்திற்கும் சாதாரணமாக என் விருப்பத்தினின்றும் வேறுபட்டதாகவோ அல்லது என் விருப்பத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகவோ இருந்தாலும் கூட நான் அவற்றிற்கு இசைவாக நடந்துகொள்கிறேன். நான் மிகவும் தகுதியான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன். ஆனால், நான் அதற்காக நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இந்த அபூர்வமான, மனங்கவரும் அழகு என் மனக்கவலைகளையெல்லாம் அகற்றிவிடுகிறது. நான் உலகத்தில் உள்ள எதற்காகவும் அதைப் பிரியமாட்டேன்.

ஆகவே, நான் மிக முக்கியமான பெரிய விஷயங்களைப் பற்றிய கவலைகளையெல்லாம் விட்டு விட்டேன். முன்னைப் பழங்கதைகளைப் படிப்பதையும் பின்னைப் புதுமைகளைப் பற்றி ஆராய்வதையும் விட்டு விட்டேன். காதல் இன்பத்தையே நான் நாடுகிறேன். காதல் தேவதையையும் அவளுடைய தேவதைக் கூட்டமனைத்தையும் நான் போற்றுகின்றேன். உங்கள் காதலியைப் பற்றி நீங்கள் எதுவும் தெரிவிக்கவேண்டுமென்றால் என்னிடம் தெரிவியுங்கள். மற்ற விஷயங்களை, என்னைக் காட்டிலும் அவற்றைப் புரிந்து ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களைப் பார்த்துத் தெரிவியுங்கள்.

முக்கியமான விஷயங்கள் வேதனையைத் தவிர வேறு எதையும் எனக்களித்ததில்லை. அற்பவிஷயங்களோ ஆனந்தத்தையும் இன்பத்தையுமே அளிக்கின்றன.

தங்கள் பணியாள் நிக்கோலோ மாக்கியவெல்லி