பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

"சாயங்காலம் வந்தவுடன் நான் வீட்டிற்குத் திரும்பிச் சென்று என் படிக்கும் அறைக்குள் நுழைவேன். அப்படி நுழையுமுன், நான் தினமும் பகலில் உடுத்திக் கொண்டிருக்கும் அழுக்கும் தூசியும் நிறைந்த ஆடைகளைக் களைந்து விட்டு, அரசாங்க உடைகளை அணிந்து கொண்டு, முன்னோர்களான அந்தப் பெரியோர்களின் ஆஸ்தானத்திற்குள்ளே {புத்தக சாலைக்குள்) நுழைவேன். அங்கே அவர்கள் என்னை அன்போடு வரவேற்பார்கள். அங்கே எனக்கே சொந்தமான உணவுகளை நான் உண்பேன்; எவற்றை உட்கொள்ளுவதற்காக நான் பிறந்திருக்கிறேனோ அவற்றை நான் உண்பேன். பிறகு நான் ஊக்கத்துடன் அவர்களோடு உரையாடுவேன். அவர்களுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் என்னவென்று கேட்பேன். அவர்கள் எனக்கு மரியாதை காட்டி விருப்பத்தோடு என் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். அந்த நான்கு மணி நேரமும் நான் என் மனக்கவலைகளையெல்லாம் மறந்திருப்பேன், அந்த நேரத்தில் நான் என் வறுமையைக் கண்டு பயப்படமாட்டேன். சாவும் என்னைப் பயமுறுத்தாது. நான் அவர்களோடு முழுக்க முழுக்க ஒன்றி விடுவேன்.”

மாக்கியவெல்லி, பழைய காலத்து நூல்களைப் படிப்பதைத்தான் இப்படிக் கற்பனையாகத் தம் நண்பருக்கு எழுதியிருக்கிறான். இவையெல்லாம் அவன் வறுமையின் ஆரம்பகட்டம். வறுமையின் உச்சக்கட்டத்திலே அவன் தன் நண்பருக்கு எழுதியுள்ள கடிதம் மிகவும் உருக்கமானது. "என் தொண்டின் பெருமையை அறியக் கூடியவர் யாரும் இல்லையே!" என்று வருந்துகிறான். "நான் எதற்காவது பயன்படுவேன் என்று நினைக்கக் கூடியவர் இல்லையே!” என்று ஏங்குகிறான்.

"என் வேலையின் சிறப்பை நினைத்துப் பார்க்கக் கூடியவர்கள் யாருமில்லை. நான் எதற்காவது பயன்படக் கூடியவன் என்று நினைப்பவர்களும் இல்லை. இப்படிப்பட்ட பேன் கூட்டத்தினிடையேதான் நான் தொடர்ந்து இருந்து வர வேண்டியிருக்கிறது. ஆனால் இதே நிலையில் நான் நீடித்து இருக்க முடியாது. என் கைப்பொருளெல்லாம் பெரும்பாலும் செலவழிந்து போய்விட்டது. எல்லாம்வல்ல அந்த இறைவன் என்னிடம் கருணைகாட்டி ஏதாவது செய்யவில்லையானால் நான் என்றாவது ஒருநாள் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட வேண்டித்தான் நேரிடும். என்னால் எதுவும் நல்லபிழைப்பாகப் பிழைக்க முடியவில்லை