பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

நரியைப்போல் சதிவலைகளை அறிந்து கொள்ளும் தந்திர சூட்சும அறிவும், ஓநாய்களான பகைவர்களை சிங்கத்தைப் போல் அச்சுறுத்துந் தன்மையும் ஓர் ஆட்சியாளனுக்கு வேண்டும்.

ஓர் ஆட்சியாளன், தாராள மனப்பான்மையுள்ள வள்ளல் என்று பெயரெடுப்பதற்காக, வரிபோட்டு, மக்களைச் சுரண்டிக் கொடுங்கோலன் என்று நிந்திக்கப் படுவதைவிட, கருமித்தனம் உடையவன் என்று பெயரெடுப்பது நல்லது.

நாடாளும் மன்னன், தேவை ஏற்பட்டால் ஒருவன் உயிரை வேண்டுமானாலும் பறிக்கலாம். ஆனால் ஒருவன் உடமையை மட்டும் பறிக்கவே கூடாது! ஏனெனில் மக்கள் தங்கள் தந்தையின் சாவைக்கூட மறந்து விடுவார்கள். ஆனால் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் பொறுக்கவே மாட்டார்கள்!

ஆட்சிபீடம் ஏறிய ஒருவன் தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புவானேயாகில், அவன் சந்தர்ப்பத்திற்கேற்ப. நல்லவனாய் இல்லாமல் இருக்கவும், தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்பத் தன் அறிவைப் பயன்படுத்தவோ, பயன்படுத்தாமலோ இருக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சியாளன் புத்தியுள்ள வனாயிருந்தால் சமாதான காலத்தில் சோம்பேறியாய் இருக்கக் கூடாது. ஆபத்துக் காலத்தில் தற்காத்துக் கொள்ளவும், தாக்குதல்களைச் சமாளிப்பதற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பலம் பொருந்திய நகரத்தையும், தன்னை வெறுக்காத மக்களையும் உடைய அரசன் தாக்குதலுக்கு ஆளாக மாட்டான் . அப்படியே தாக்கப்பட்டாலும், தாக்கியவனே வெட்கமடைந்து புறமுதுகு காட்டி ஓடும்படி நேரிடும்.

சீர்கெட்ட ஒரு நகரத்தை அடையும் ஒர் அரசன் அதை சீர்த்திருத்துவதன் மூலம் புகழடைகிறான்!

நல்ல அரசுகள் நிலைத்து நிற்கக் கூடிய தன்மையற்றுப் போவதால் தீய அரசுகளாக மாறி விடுகின்றன. இவ் வகையில் நல்ல அரசுகளும் குறைபாடுடையனவே.

பரம்பரை அரசர்கள் தங்கள் ராஜ்யத்தை இழக்க நேரிட்டால் அது அதிர்ஷ்டத்தின் கோளாறல்ல. அவர்களுக்கு ஆளத் தெரியாததின் கோளாறேயாகும்!