பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

புகழ்பெற்ற சிந்தனையாளனான நிக்கோலோ மாக்கியவெல்லி வயிற்று வலியின் காரணமாகத் தன் வாழ்வை நீத்து விட்டான். அவனுடைய குடும்பத்துக்கு அவன் விட்டுச்சென்றது வறுமை ஒன்றுதான். அவன் சாவைப் பற்றி அவன் மகன் தன் நண்பனான பிரான்செஸ்கோ நெல்லோ என்பவனுக்கு சுருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறான்.

பீசா, ஜூன் 22, 1527

என் அன்பு மிகுந்த பிரான்செஸ்கோ,

என் தந்தை நிக்கோலோ இந்த 22-ம் தேதியன்று இறந்து போனார் என்ற செய்தியை உனக்குச் சொல்ல வேண்டியிருப்பதை முன்னிட்டு என்னால் அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. 20ம் தேதியன்று - அவர் குடித்த ஒரு மருந்து உண்டாக்கிவிட்ட வயிற்று வலி அவர் உயிரைக் குடித்து விட்டது. கடைசிவரை அவர் கூடவே இருந்த சகோதரர் மாத்யூவை அவர் தம் பாவமன்னிப்புப் பிரார்த்தனையைக் கேட்க அனுமதித்தார். எங்கள் தந்தை எங்களை மிகப் பயங்கரமான வறுமையில் விட்டுவிட்டுப் போய்விட்டார். இது உனக்குத் தெரிந்ததே. நீ இந்த வழியாகத் திரும்பி வரும்பொழுது நான் உன்னிடம் சொல்லவேண்டியது ஏராளமாயிருக்கிறது. இப்பொழுது. நான் மிக அவசரமான கட்டத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் நான் சொல்லப் போவதில்லை. என் நல்வாழ்த்துக்கள்

உன் உறவினன்;
பியரோ மாக்கியவெல்லி.

நிக்கோலோ மாக்கியவெல்லிக்குப் பிறகு அவனுடைய குடும்பத்தில் அல்லது பரம்பரையில் யாரும் அவனைப் போல் சிறந்து விளங்கவில்லை.

உலகத்துப் பேரறிவாளிகள் பலர் தாங்கள் இறந்தபோது, தங்கள் ஆராய்ச்சியின் பயனாக விளைந்த கருத்துரைகளை உலகத்துக்குக் கொடுத்து விட்டுப் போனார்கள். ஆனால் தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கள் திறனறிவையும் கொடுத்து விட்டுப் போனதில்லை; அவர்கள் வாழ்வதற்காகப் பொருளும் வைத்து விட்டுப் போனதில்லை.