பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வேண்டியிருக்கிறது. ஆனாலும் அவன் காட்டுகின்ற சூழ் நிலைகளோடு பொருத்திப் பார்க்கின்றபோது, வீழ்ச்சியடைய விரும்பாதவன் அவற்றைக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறபோது அவை அந்தச் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன.

லீவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சியை மாக்கியவெல்லி மக்களுக்காகச் செய்தான் என்றால் அரசன் என்ற இந்த நூலை அரசர்களுக்காகச் செய்தான் என்று சொல்லலாம். அரசன் என்ற தலைப்பே இது முடியரசையாதரித்து எழுதப்பட்ட நூல் என்பதைக் காட்டுகிறது. இந்த நூலையும் மாக்கியவெல்லி ஓர் அரசனுக்கே காணிக்கையாக்கியிருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாக்கியவெல்லி, நிலைபெற்ற அரசு ஏற்பட்டு மக்கள் மகிழ்வுற்று வாழவேண்டும் என்பதற்காகத் தான் இந்நூலை எழுதினான். ஆனால் குடிமக்கள், அரசாங்கத்திற்கு வழிகாட்ட வேண்டிய நூலாக இருப்பதற்குப் பதிலாக அது சர்வாதிகாரிகளுக்குத் துணை போடும் நூலாகக் கருதப்பட்டு விட்டது. இது எப்படியிருக்கிறதென்றால், மருத்துவர்கள் மக்களின் நோயைப் போக்கக் கண்டுபிடிக்கிற மருந்து சிலருக்கு விஷமாகப் பயன்படுவது போலிருக்கிறது. மக்கள் உழைப்பைக் குறைப்பதற்காக விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிற இயந்திர சாதனங்கள் ஒரு சிலரின் பணப் பையை வீங்க வைப்பதற்குப் பயன்படுவது போல், மாக்கியவெல்லியின் நூல் சர்வாதிகாரிகள் பலருக்குப் பயன்பட்டிருக்கிறது.

பாக்கியவெல்லியின் அரசன் என்ற இந்த நூலைப் படிக்கிறபோது, சரித்திர நூலைப் படிப்பதுபோல் சங்கடமோ, ஆராய்ச்சி நூலைப் படிப்பது போல் கஷ்டமோ ஏற்படவில்லை. துப்பறியும் கதையைப் படிப்பதுபோல் இருக்கிறது. விஷயங்களை அவ்வளவு கவர்ச்சிகரமாக எழுதியிருக்கிறான். விவாதங்கள் அவ்வளவு வேகமாக நடை பெறுகின்றன! 1559-ஆம் ஆண்டில் ரோமாபுரியில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் அரசன் நூலும் சேர்க்கப்பட்டது.