பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

புதிய அரசனுடைய ஆட்சியை மிகவும் அமைதியாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.

இப்படிப்பட்ட ராஜ்யங்களை அடைந்து அவற்றை நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கின்ற அரசர்கள் இரண்டு விஷயங்களை மனத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலாவதாக அந்த ராஜ்யத்தின் பழைய அரசர்களின் இரத்தக் கலப்புள்ளவர்கள் யாரும் இல்லாதபடி ஒழித்துவிட வேண்டும். இரண்டாவதாக அவர்களுடைய நீதி முறைகளிலோ அல்லது வரிகளிலோ மாற்றம் செய்யக் கூடாது. இம்மாதிரியாக நடந்து கொண்டால் மிகக் குறைந்த கால அளவில் தங்கள் ஆதிக்கத்திலுள்ள எல்லா ராஜ்யங்களையும் ஒன்று சேர்த்து ஒரே ராஜ்யமாக ஆக்கிவிடலாம்.

ஆனால் வெவ்வேறு விதமான மொழிகளும், பழக்க வழக்கங்களும் நீதி முறைகளும் உடைய ராஜ்யங்களைக் கட்டி ஆள்வது மிகவும் கஷ்டம். அதற்குப் பெரும் உழைப்பும் நல்ல அதிர்ஷ்டமும் வேண்டும். அவற்றைத் தன் ஆட்சியில் நிலைப்படுத்திக் கொள்வதற்குள்ள மிகச்சிறந்த வழிகளிலொன்று புதிய அரசன் அங்கேயே இருந்து விடுவது தான். அங்கேயே இருந்தால் குழப்படிகள் ஏற்படுகின்றன. ஆரம்பத்திலேயே அவற்றைத் தெரிந்து கொண்டு அவ்வப்போதே அவற்றைத் தீர்த்துவிடலாம். அரசன் தூரப் பிரதேசத்திலிருந்தால் அவன் அவற்றைப் பற்றிக் கேள்விப்படுவதற்கு முன்னாகவே அவை தீர்க்கமுடியாத அளவிற்கு வளர்ந்துவிடக்கூடும். தவிரவும் அதிகாரிகள் இருந்து அரசாள்வதை விட அரசனே நேரில் இருந்து ஆண்டால் குடிமக்கள் அவனுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும், நேசங்காட்டவும், ராஜபக்தி கொள்ளவும் வாய்ப்பாயிருக்கும். வேறுவிதமாக இருந்தால் மக்கள் அவனுக்குப் பயப்படவே பெரிதும் இடங்கொடுக்கும். அந்த ராஜ்யத்தைத் தாக்க விரும்புகின்ற வெளி ஆதிக்க சக்தி எதுவும் எளிதாக அதை அபகரித்துவிட முடியாது.

அந்த ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்குச் சிறந்த வேறொரு வழி, அந்தத் தேசத்தின் திறவுகோல் போலுள்ள இரண்டொரு இடங்களில் குடியேற்ற நாடுகளை உண்டாக்குவதுதான். ஒரு பெரிய ராஜ்யத்திற்கு ஆயுதபாணிகளான பெரும்படையை வைத்திருப்பதோ அல்லது குடியேற்ற நாடுகளைக் கொண்டிருப்பதோ மிக அவசியமாகும். இராணுவத்தை