பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வைத்திருப்பதால் அரசனுக்கும் பெருஞ் செலவு ஏற்படும். குடியேற்ற நாடுகளால் அவனுக்குச் சிறிதுகூடச் செலவு இல்லை. ஏற்கனவே அங்கு வாழ்ந்தவர்களை ஓட்டாண்டியாக்கிவிட்டு அவர்களுடைய வீடு வாசல்களையும் நில புலன்களையும் தன் நாட்டவருக்குக் கொடுக்கப் போகிறான். ஓட்டாண்டிகளான அந்த நாட்டு மக்களோ, ஏழைகளாய், எளியவர்களாய், ஏதுமற்றவர்களாய் இருப்பதால் அவர்கள் அரசை எதிர்த்து எதுவும் செய்துவிடப் போவதில்லை. (சாதாரணமாக மனிதர்கள் சிறு தீமைகளுக்குத் தான் நம்மைப் பழி வாங்குவார்கள். பெருந்தீமைகளுக்குத் தகுந்தபடி. பழி வாங்க முடியாத நிலைமையில் அவர்கள் இருப்பார்கள்). ஆகவே அவர்கள் பழி வாங்கி விடுவார்களே என்று பயப்படத் தேவையில்லை. பட்டாளங்களை வைத்திருப்பதால் செலவு ஏற்படுகிறது. செலவுக்காக மக்களுக்கு வரி விதிக்க வேண்டியிருக்கிறது. அதனால், வரிப் பளுவைத் தாங்க முடியாத மக்கள் எதிரிகளாகி விடுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் பட்டாளங்கள் வைத்திருப்பது பயனற்றது என்பதும் குடியேற்ற நாடுகளை வைத்திருப்பது பெரும்பயனுள்ளது என்பதும் புரியும்.

ஓர் அன்னிய நாட்டை அரசாளுகிறவன், அக்கம் பக்கத்தில் உள்ள வலுக்குறைந்த அரசர்களுக்குத் தான் ஒரு தலைவனாகவும், அவர்களின் பாதுகாவலனாகவும் இருக்கும்படி, தன்னை ஆக்கிக் கொள்ளவேண்டும்; வலு மிகுந்தவர்களைப் பலவீனமடையச் செய்ய முயல வேண்டும்; தன்னைக் காட்டிலும் பலக் குறைவில்லாத வேறோர் அன்னிய அரசனால் அவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப்படாதபடி அவன் எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். வலுமிகுந்த வேறோர் அன்னியன் படையெடுக்கும் போது வலுக்குறைந்த எல்லோரும் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி செய்து, படையெடுத்து வருபவனை அவர்கள் ஆதரவுடனும், தன் படைகளுடைய உதவியுடனும் தோற்கடித்து விடலாம். தன் உடன் சேரும் அக்கம் பக்கத்து அரசர்கள் மிகுந்த அதிகாரமும், ஆற்றலும் அடைந்து விடாதபடி சிறிது கவனமாகப் பார்த்துக் கொண்டால் போதுமானது. எப்பொழுதும் அந்த ராஜ்யங்களின் மத்தியஸ்தனாகத்தான் விளங்கவேண்டும். இந்த முறையில் தன் ஆட்சியைச் சரிவர நடத்தாதவன் பல கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகித் தன் கைவசப்படுத்திய ஆட்சியையும் நழுவ விட்டு விடும்படி நேரிடும்.