பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கொடுஞ் செயல்கள் மூலம் அரசர் ஆதல் :

அதிர்ஷ்டவசமாகவோ அல்லது திறமையினாலோ அரசராவது தவிர இன்னும் இரண்டு வழிகள் இருக்கின்றன. அவை துரோகம் அல்லது கொடுஞ் செயலின் மூலம் அரசர் ஆதலும் அல்லது உடன் வாழும் குடிமக்களின் ஆதரவால் அரசர் ஆதலும் ஆகும்.

படைத் தலைமை வகிக்கும் சிலர் திடீரென்று ஆட்சிக் குழுவினரையும் முக்கியமானவர்களையும் ஒரேயடியாகக் கொன்றுவிட்டுத் தாங்கள் ஆட்சித் தலைமையைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். ஒருவன் தன் உடன் வாழும் குடிமக்களைக் கொன்று குவிப்பதும், தன் நண்பர்களுக்கு இரண்டகம் பண்ணுவதும் உண்மை. இரக்கம், மனிதாபிமானம் முதலியவை இல்லாமல் இருப்பதும், அறமல்ல! இப்படிப்பட்ட கொடியவழியில் ஒருவன் அதிகாரத்திற்கு வேண்டுமானால் வரலாமேயொழிய கீர்த்தியும் புகழும் அடைய முடியாது.

இப்படிப்பட்ட எல்லையில்லாத கொடுமையும் துரோகமும் சதியும் புரிந்தவர்கள் சிலர், வெளிப் பகைவர் படையெடுத்த காலத்திலும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டு, தங்கள் குடிமக்களால் எவ்வித சூழ்ச்சியும் சதியும் செய்யப்படாமல் எப்படி நெடு நாளைக்குத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளுகிறார்கள் என்று சிலர் ஆச்சரியப்படக் கூடும். எத்தனையோ பேர் சமாதான காலத்திலேயே தங்கள் கொடுந்தன்மையின் காரணமாகத் தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் திண்டாடிப் போயும் இருக்கிறார்கள். போர்க்களத்தில் அப்படிப்பட்டவர்களின் நிலைமையைப் பற்றிப் பேசவே வேண்டியதில்லை. ஆனால் ஒரு சிலர் இதற்கெல்லாம் ஆட்டங்கொடுக்காமல் நிலைத்திருக்கிறார்களே என்று கேட்டால், அது அவர்கள் செய்கின்ற கொடுஞ் செயலின் தன்மையைப் பொறுத்தது என்றே சொல்லவேண்டும். தங்கள் கொடுஞ் செயலைப் பூரணமாக நிறைவேற்றி முடித்தவர்கள் பின்னால் தங்கள் நிலைமையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அரைகுறையாக விட்டு வைத்தவர்களால் அது முடியாது.

ஓர் ராஜ்யத்தை அடையும்போது அதற்காகச் செய்ய வேண்டிய கொலை முதலிய கொடுமைகளையெல்லாம் ஒரேயடியாக உடனடியாகச் செய்துவிட்டால் பிறகு, மேற்கொண்டு எவ்விதமான கொடுமையும் செய்யாமல்