பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

அரசர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தினாலும் என்றும் ஆதிக்கத்தில் நிலை நிற்க முடிகிறது. இந்த மத ராஜ்யங்களின் அரசர்கள் மட்டுமே பாதுகாக்கத் தேவையில்லாத ராஜ்யங்களைப் பெற்றிருக்கிறார்கள்; ஆளப்படவேண்டிய இல்லாத குடிமக்களை அடைந்திருக்கிறார்கள். அவர்களுடைய ராஜ்யங்கள் பாதுகாக்கப் படாதவையாகையினாலே அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய குடிமக்கள் ஆளப்படுவதில்லையாகையினாலே, அவர்கள் இந்த அரசர்களிடம் பகைமை பாராட்டுவதுமில்லை. ஆகவே இந்த உலகத்தில் இந்த மத ராஜ்யங்களின் அரசர்கள் மட்டுமே பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இன்பமாகவும் ஏற்றமாகவும் இருக்கிறார்கள். இந்த அரசாங்கங்கள் இறைவனாலேயே உயர்த்தப்பட்டும் நடத்தப்பட்டும் வருவதால் இவற்றை ஆராய்பவன் அகம்பாவமும் மூடமதியும் உள்ளவனாகிவிடுவான்.

ஆனால், திருச்சபை (Church) இவ்வளவு பெரிய லௌகிக ஆதிக்கத்தை எப்படியடைந்தது என்று கேட்கலாம். படை பலத்தாலும் பண பலத்தாலும் தான் இந்த அரசு நிலை நிறுத்தப்பட்டது என்பதைச் சரித்திரம் நமக்குத் தெள்ளத் தெளியக் காட்டுகிறபடியால் அதைப் பற்றிப் பேசுவது அதிகப் பிரசங்கித்தனமாகாது என்றே எண்ணுகிறேன். நான்காவது அலெக்சாண்டர் போப்பாவதற்கு முன்னால் போப்பாண்டவர்களின் பாடு திண்டாட்டமாகவே இருந்தது. எதிர்ப்பு சக்திகளை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். நான்காவது அலெக்சாண்டர்தான் இந்த லௌகிக பதவியைக் காப்பாற்றப் படைபலத்தையும், பண பலத்தையும் உபயோகிக்கலாம் என்று செய்து காட்டினார். அவர் வாலென்டைன் கோமகனைத்தான் உயர்த்தப் பாடுபட்டார் என்றாலும் அது திருச்சபையின் மேம்பாட்டில் வந்து முடிந்தது. பிறகு வந்த போப் ஜூலியால் திருச்சபையின் ஆதிக்கத்தைப் பலவகைகளிலும் பலப்படுத்தினார். புனித போப் பாண்டவர் பத்தாவது லியோ இந்தக் குருபீடத்தை மிகுந்த அதிகாரம் நிறைந்த நிலை பெறச் செய்தார். மற்ற போப் பாண்டவர்கள் படைபலத்தை நாடினார்கள். இவரோ நல்ல குணத்தினாலும் வேறுபல நன்னெறிகளாலும் இந்தக் குருபீடத்தை மேன்மையுடையதாகவும் போற்றத் தகுந்ததாகவும் ஆக்கினார்.