பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

சுரண்டாமலும் தான் ஏழ்மையடையாமலும், கொள்ளைக்காரனாகப் பிரியப்படாமலும் இருக்கும் அரசன் தான் ஒரு கருமி என்று பெயர் எடுப்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்.

சில அரசர்கள் தங்கள் படைவீரர்களிடம் மிகத் தாராளமாக நடந்து கொண்டு பெரும் பெரும் காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அரசன் தன் கைப்பணத்தைச் செலவழிப்பதாயிருந்தாலும் தன் குடிமக்களின் பணத்தைச் செலவழிப்பதாயிருந்தாலும் தான் கேடுண்டாகும். ஆனால், பிறருடைய பணத்தைத் தாராளமாகச் செலவிடுவதிலே எவ்விதமான நஷ்டமோ அல்லது கஷ்டமோ அவன் அடையப்போவதில்லை. தன் படைகளுடன் எப்பொழுதும், கொள்ளையடிப்பதும், ஆட்களைப் பிடிப்பதும், அவர்களிடம் மீட்புத் தொகை கேட்பதும் இப்படியாகத் தன் வாழ்வை நடத்துகிற அரசனுக்குத் தாராள மனப்பான்மை மிகமிக அவசியமானது. அந்த மனப்பான்மையில்லையானால், படை வீரர்கள் அவனைத் தொடர்ந்து திரிய மாட்டார்கள். தன் பணமும் இல்லை, தன் குடிமக்களின் பணமும் இல்லை ...... யாரோ பகைவர்களுடைய பணம் தன் தாராளத்திற்குப் பயன்படுகிறதென்றால், யாராயிருந்தாலும் மிகத் தாராளமாகத்தான் இருப்பார்கள்.

வெறுப்பையும் பழிப்பையும் உண்டாக்கக் கூடிய கொள்ளைக்காரன் என்ற பெயரை அடைவதைவிட வெறுப்பு இல்லாத பழிப்பை மட்டும் பெறக்கூடிய கருமி என்ற பெயரைப் பெறுவது வரவேற்கத் தக்கதாகும்; அதுவே புத்திசாலித்தனமுமாகும்.

கொடுந்தன்மை :

ஒவ்வோர் அரசனும் தான் கொடுந்தன்மையுடையவனாக மதிக்கப்படுவதைவிட அருளுடையவனாக நினைக்கப்படுவதையே விரும்ப வேண்டும். ஆனால், அவனுடைய அருளுடைமையைத் தவறான முறையில் பயன்படுத்தாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தன் குடிமக்களை உண்மையுள்ளவர்களாகவும் ஒற்றுமையுள்ளவர்களாகவும் இருக்கச் செய்வதற்காக ஓர்