பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அரசன் கொடியவன் என்று குற்றஞ்சாட்டப்படுவதைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. கொடியவன் என்று பெயர் எடுக்கக் கூடியவன் உண்மையில் இளகிய உள்ளம் படைத்தவர்களைக் காட்டிலும் கருணையுள்ளவன் என்று மெய்ப்பித்துக்காட்டலாம். எவ்வாறெனில் இளகிய உள்ளம் படைத்தவர்களின் கருணைக் குணத்தினால், நாட்டிலே ஒழுங்கின்மையும் குழப்பங்களும் ஏற்பட்டு அதனால், பலர் இரத்தஞ் சிந்த வேண்டிய கட்டங்கள் ஏற்படக் கூடும். இதனால், சமூகம் முழுவதுமே துயர்ப்படுவதைக் காட்டிலும், குறிப்பிட்ட தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கக் கூடிய அரசன் கருணையுள்ளவன் என்று தானே குறிப்பிடப்பட வேண்டும். எல்லா அரசர்களிலும் புதிதாக அரசரானவர்கள் கொடியவர் என்ற குற்றச்சாட்டுக்குத் தப்புவது அரிது. ஏனெனில், புதிய ராஜ்யங்களில் இயற்கையாகவே எப்பொழுதும் ஆபத்துக்கள் நிறைந்திருக்கும்.

ஓர் அரசன் நம்பிக்கை வைப்பதிலும், செயலாற்றுவதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக அவன் தன் நிழலையே கண்டு பயப்பட்டு விடவும் கூடாது. அதிகமாக நம்பிக்கை வைத்து எச்சரிக்கையாக இல்லாமல் போய்விடவும் கூடாது. அதிகமாகச் சந்தேகப்பட்டுத் திறமையற்றவனாகிவிடவும் கூடாது.

அரசன் அன்பிற்குரியவனாக இருக்க வேண்டுமா அஞ்சுதலுக்குரியவனாக வேண்டுமா என்று கேட்டால், அஞ்சப்படவும் வேண்டும் அன்பு செய்யப்படவும் வேண்டும் என்று தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், இரண்டு நிலைமைகளையும் ஒருங்கே அடைவது முடியாதே; இவற்றில் ஒன்றைத்தானே அடைய முடியும் என்று கேட்டால், அன்பிற்காளாவதை விட அச்சத்திற்காளாவதே மிக்க பாதுகாப்பானாது என்று கூறுவேன்.

(தங்களை அன்பு காட்டச் செய்கின்றவனுக்குக் குற்றமிழைப்பதைக் காட்டிலும் அச்சமுறச் செய்கின்றவனுக்குக் குறைவாகவே குற்றமிழைப்பது மனிதர் இயல்பு.) காரணம் என்னவென்றால்; அன்பு மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழுவது. தாங்கள் ஏதாவது நன்மை பெறுகின்றவரையில் அன்பு செலுத்துவார்கள். அது நின்று போனதும் அன்பும் அறுந்து போகும். ஆனால் தண்டனைக்குப் பயப்படுவதால் ஏற்படக் கூடியதாக