பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

தீய அரசு மூன்று என ஆறுவகை அரசுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். நல்லவை மூன்று நாம் மேலே குறிப்பிட்டிருப்பவை. தீயவை மூன்று என்பன, அவற்றில் இருந்து திரிந்து மாறுபட்டவை - அவற்றையே ஒத்த அவற்றில் இருந்தே பிறந்த தீய பயனுடையவையாம். எனவே அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டையுணர்வது எளிது.

இம்முறையில் பார்த்தால் முடியாட்சி கொடுங்கோலாட்சியாகிறது; மேன்மக்களாட்சி ஒரு சில பேர்வழிகளின் ஆட்சியாகிறது; பொதுக் குடியாட்சி கட்டுப்பாடற்ற தனிமையடைகிறது. நல்ல ஆட்சிகள் மூன்றும் இப்படி மாறு படாமல் தவிர்ப்பதற்கு வழி எதுவும் இல்லை. ஏனெனில் இரண்டு வகைகளுக்கும் உள்ள ஒப்பான தோற்றமும் தொடர்பான நிலையும் மிக நெருக்கமானவை.

உலகந் தோன்றிய காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கை சிறிதே, அவர்கள் மிருகங்களைப் போல் தனித் தனியே பிரிந்து வாழ்ந்தார்கள். மனித இனம் பெருகியபோது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் ஒன்று சேரவேண்டிய, அவசியம் ஏற்பட்டது. அப்படி ஒன்று சேர்ந்தவர்கள் தங்களைக் கட்டுப்பாடாக நடத்த வலிவும் வீரமுமுடைய ஒருவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். பிறகு தங்களிலே, நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரித்து அறியத் தலைப்பட்டார்கள்; நீதி முறைகளை ஏற்படுத்தித் தங்களுக்கு விரோதிகளானவர்களுக்குத் தண்டனைகளையும் உண்டாக்கினார்கள். இதுதான் நீதி பிறந்த கதை.

தேர்ந்தெடுக்கும் முறை நின்று அரசுரிமை பரம்பரைப் பாத்தியதை யாக்கப்பட்ட காலத்தில், மன்னனுக்குப் பின் மன்னனாக அவன் மகன் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாமல், வகை வகையான இன்பங்களை அனுபவிக்கப் பிறந்தவன் தான் என்று எண்ணிக்கொள்ள ஆரம்பித்தான்.

இந்நிலையில் அந்த மன்னன் குடிமக்களின் வெறுப்புக்குரியவனானான். வெறுப்புக்காளானவன் அச்சமடைந்தான், அச்சத்தின் காரணமாக எச்சரிப்புடையவனாகவும் கொடுமைகள் புரிபவனாகவும் மாறினான். இவ்வாறுதான் கொடுங்கோலாட்சி பிறந்தது.

மன்னன் என்ற பெயரையே வெறுக்கத் தொடங்கிய மக்கள், தங்களுக்குள் ஒரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்திக்