பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

கூறுகிறேன். நல்லதிர்ஷ்டமும் இராணுவக் கட்டுப்பாடும் மட்டும் இல்லாவிட்டால் குடியரசுகளினிடையில் மிகக் கேவலமான நிலைக்கு ரோமாபுரிக் குடியரசு போயிருக்கும் என்பதையும் மறுக்கிறேன்.

ரோமாபுரியின் ஆட்சிக் குழுவினருக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டங்களைக் கண்டிப்பவர்கள், அதனால் விளைந்த கூச்சலையும் குழப்பத்தையும் எண்ணுகிறார்களே தவிர, அதனால் விளைந்த நல்ல பலனை நினைத்துப்பார்க்கவில்லை. ஆட்சிக் குழுவினரும் பொதுமக்களும் இரண்டு கட்சியினர் என்று அவர்கள் கருதுவதில்லை. விடுதலை வேட்கையைத்தான் எல்லா நீதி முறைகளும் ஆதரிக்கின்றன என்பதையும் குறைகூறுபவர்கள் உணர்வதில்லை. மக்கள் நன்னடத்தை உடையவர்களாயிருக்க வேண்டுமானால் நல்ல கல்வி கற்றவராயிருக்கவேண்டும். நல்ல கல்வி நல்ல நீதி முறையிருந்தால்தான் கிடைக்கும். நல்ல நீதிமுறை, பலரால் பழிக்கப்படும் இப்படிப்பட்ட கலகங்களால் தான் கிடைக்கும். கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்.

குடிமக்களின் இந்தக் கலகங்களை எண்ணிப் பார்த்தால், அவற்றால் எவ்விதத் தீமையும் விளையவில்லை என்பதும் பொது மக்கள் உரிமைபெற வகை செய்யும் நீதி முறைகள் தாம் அவற்றால் தோன்றியிருக்கின்றன என்பதும் தெளிவாகும்.

மக்கள் கூச்சல் எழுப்புவதும், வீடுகளை மூடிவிட்டு வீதியில் குழப்பமான நிலையில் ஓடுவதும், ஆகிய காரியங்கள் பற்றிப் படிப்பதற்கும் பயங்கரமாகத்தான் தோன்றும். ஆனால் சுதந்திரமுள்ள ஒவ்வோர் அரசும், குடிமக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் கூறுவேன். எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் குடியரசு முக்கியமான சமயங்களில் இதே பொதுமக்களின் உதவியை நாடவேண்டியும் வரும். “மக்கள் அறியாமையுள்ளவர்களாய் இருந்தாலும் உண்மையை மதிக்கத் தெரிந்தவர்கள். தங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவனால் அது வெளிப்படுத்தப்படும்போது அவர்கள் அதற்கு ஆட்படத் தயாராயிருக்கிறார்கள்” என்று சிசரோ கூறுகிறான்.