பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீறத்தொடங்குவதோடு பலவிதக் குழப்பங்களும், தொல்லைகளும் உண்டாகும். குடியரசும் நிலைகுலைந்து போய் விடும். ஏனெனில் இந்தக் கொடுமை தனிப்பட்டவர்களாலோ, அன்னியப் படைகளினாலோ செய்யப் பட்டதில்லை; பொது சக்தியான ஆட்சிக்குழுவினால் விளைந்ததுவேயாகும்.

வதந்தியினால் வரும் கேடு :

குடியரசிலும், மற்ற எந்த அரசிலும், மிகவும் அருவருக்கத் தகுந்த நிகழ்ச்சி வதந்தி கிளப்பி விடுவதுதான். அவைகளைக் காலா காலத்தில் அடக்குவதற்குக் கையாள வேண்டிய முறைகளையெல்லாம் ஒன்று பாக்கிவிடாமல் செய்ய வேண்டியது. அந்த அரசின் கடமையாகும். சட்டரீதியாகக் குற்றஞ்சாட்டக் கூடிய முறையை ஏற்படுத்துவதைக் காட்டிலும், வதந்திகளை நிறுத்துவதற்குச் சரியான வழி வேறு எதுவும் இல்லை. வதந்திகள் ஒரு குடியரசை எவ்வளவு பாழ்படுத்த முடியுமோ, அவ்வளவு இந்த முறை நலங்கொடுக்கும் என்பது திண்ணம்.

வதந்தி கிளப்பி விடுவதற்கும் குற்றஞ்சாட்டுவதற்கும் ஒரு பெரிய வேற்றுமை இருக்கிறது. வதந்திக்கு எவ்விதமான சாட்சியமோ சான்றோ தேவையில்லை; அதை மெய்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை; நேருக்கு நேர் எதிர்த்து நின்று பழி சுமத்த வேண்டியதுமில்லை! ஆகவே ஒவ்வொரு மனிதனும் மற்றொரு மனிதனால் வதந்தியை ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட முடியும். ஆனால், குற்றஞ் சாட்டுவது என்ற முறை ஏற்பட்டால், யாரும் யார் மீதும் தக்க சான்றில்லாமல் எதுவும் செய்யாது. குற்றச்சாட்டுகள், நீதிபதிகளின் முன்னாலோ, முடி அல்லது ஒரு சட்ட சபையின் முன்னாலோ அல்லது பொது மக்கள் முன்னிலையிலோ கொண்டு வந்து தான் செய்யப்பட வேண்டும். வதந்தியோ பொது இடங்களில் மட்டுமல்லாமல் தனி வீடுகளிலுங் கூடக் கூறப்படுகின்றன. குற்றஞ்சாட்டக் கூடிய முறையில்லாத இடங்களில்தான் வதந்தியைப் பரப்பும்முறை பெரிதும் கையாளப்படுகிறது. குற்றஞ்சாட்டும் முறையை அனுமதிக்காத அரசியலமைப்புக்களைக் கொண்ட நகர அரசுகளில்தான். வதந்தி கிளப்பி விடும் முறை கையாளப்படுகிறது.