பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

ஒரு குடியரசுக்குச் சட்டம். வகுப்பவன், ஒவ்வொரு குடிமகனும் மற்றொருவன் மேல் எவ்விதமான பயமோ, சந்தேகமோ இல்லாத முறையில் குற்றஞ்சாட்டக் கூடிய உரிமையை அந்தச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். வதந்தி கிளப்புபவர்களுக்குக் கொடிய தண்டனை வழங்க வேண்டும். இந்த முறை சரியாக நிலை பெறாத இடங்களில் எப்பொழுதும் ஒழுங்கற்ற நிலையே இருந்து கொண்டிருக்கும். ஏனெனில் இந்த வதந்திகள் யார்மீது கிளப்பி விடப்பட்டனவோ அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை; அவர்களுக்கு இதனால் மன அரிப்புத் தான் ஏற்படும். இந்த மன அரிப்பின் காரணமாக அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். தங்கள்மீது ஏற்பட்டுள்ள வதந்திகளை வெறுப்பார்களே தவிர அவற்றிற்குச் சிறிதும் அஞ்சமாட்டார்கள்.

ஆட்சி, தனி மனிதனிடத்தில் இருக்க வேண்டும் :

ஒரு புதிய குடியரசை அமைப்பதோ அல்லது பழைய அமைப்பை முற்றிலும் சீர்திருத்துவதோ ஒரே ஒரு மனிதனுடைய செயலாக இருக்க வேண்டும். ஓர் அரசியலமைப்பை ஏற்படுத்தியவன், தானே அதை நடைமுறையில் கொண்டு வருவது இன்றியமையாதது. அப்பொழுதுதான் அது நல்ல அமைப்பையும் நிர்வாகத்தையும் பெற்றதாகவும் தன் சொந்த நலத்தினும் பொது மக்கள் நலத்தை முன்னேற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டவனும், தன் வாரிசுகளைக் காட்டிலும் தன் தேசத்தையே பெரிதாகக் கருதுபவனும் ஆகிய ஒரு விவேகமுள்ள சட்டம் வகுப்பவன் எல்லாவிதமான அதிகாரங்களையும் தன் ஒருவனிடத்திலேயே வைத்திருப்பது அவசியம். இம்மாதிரியாக ஒருவன் ஓரரசையோ, குடியரசையோ நிலை பெறச் செய்வதற்கு - என்று செய்த எவ்விதமான அசாதாரணமான காரியத்தையும், புத்தியுள்ள எந்த மனிதனும் மறுத்துரைக்க முன் வரமாட்டான். அவன் செய்த காரியத்திற்காகச் சட்டம் அவனைக் குற்றம் சுமத்துமானால், அந்தக் காரியத்தால் ஏற்பட்ட நல்ல பலன் அவனை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும்.

ஒரு நீதி முறையை ஏற்படுத்தி ஆட்சி நடத்தியவன், தன் அதிகாரத்தைத் தன் வாரிசுகளிடமோ, அல்லது தான் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒருவனிடமோ விட்டுச் செல்வது