பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

புத்திசாலித்தனமான காரியமல்ல. ஏனெனில், மனிதத்தன்மை நன்மையைக் காட்டிலும் தீமையின் பக்கமே சாயும் இயல்புடையது. அவன் பொது நன்மைக்காகவே பயன்படுத்தி வந்த அதிகாரத்தை அவனுடைய பின் வாரிசாக வரக் கூடியவன் தீய காரியங்களுக்காகப் பயன்படுத்தக் கூடும். தவிரவும் ஓர் அரசாங்கத்தைத் தனி மனிதனே இயக்குவது நல்லது என்றாலும், அதை நடத்தும் பொறுப்பு முழுவதும் தனியொருவனிடத்திலேயே இருக்குமானால், அந்த அரசு நெடுநாளைக்கு நிலைத்திராது என்பது உண்மை. ஆகவே அதன் பொறுப்பைப் பலரிடத்திலே ஒப்படைப்பதுதான் நல்லது. எந்த நிர்வாகமும் பலரால் நடத்தப்படக் கூடியது அல்ல. ஏனென்றால் அவர்களுடைய கருத்து வேற்றுமைகள் எது சிறந்த முறை என்பதை ஒப்புக்கொள்ளத் தடையாக இருக்கின்றன. இருப்பினும் இந்தத் தடையின் காரணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவுடன், ஆட்சிப் பொறுப்பைக் கைவிட்டு விடுவதற்கு அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டுவிட மாட்டார்கள். இப்படிப்பட்ட பல விஷயங்களையும் யோசித்துத்தான் அரசுகளை ஏற்படுத்தியவர்கள் அதிகாரம் முழுவதையும் தம்மிடமே வைத்திருந்தார்கள்.

கீர்த்திக்கு வழி :

பாராட்டுக்குரிய எல்லா மனிதர்களிலும் மதங்களை ஏற்படுத்தியவர்களே முதன்மையாகப் பாராட்டப்படுகிறார்கள். அடுத்தப்படியாக குடியரசு அல்லது சாம்ராஜ்யங்களை யுண்டாக்கியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பின்னால், தங்கள் சாம்ராஜ்யத்தை அல்லது தேசத்தை விஸ்தரித்த வீரர்கள் வருகிறார்கள். இவர்களோடு இலக்கியம் படைத்தவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் வேறு துறையினராய்ப் போய்விட்டபடியால் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை. மதங்களை அழித்தவர்களும், அரசுகளை நிலை குலையச் செய்தவர்களும், நேர்மைக்குப் பகையாய் உள்ளவர்களும் வெறுத்துப் பழித்துச் சபிக்கப்படுகிறார்கள். அடி முட்டாள்களாகவோ, அதி புத்திசாலிகளாகவோ, பெருங்கொடுமைக்காரர்களாகவோ, மிக நல்லவர்களாகவோ யாரும் இல்லாதபடியால், இந்த இருவகைப் பட்டவர்களிலே யாரும் இல்லாதபடியால், போற்றப்பட வேண்டியவர்களைப் போற்றுவாருமில்லை, தூற்றப்பட வேண்டியவர்களைத் தூற்றுவாரும் இல்லை.