பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

இருக்கும்படி செய்வது எளிதாகும். இராணுவம் மட்டும் இருந்து மதம் இல்லாத தேசத்திலே ஒழுங்கு இருப்பது அரிது. ரோமுலஸ், ஆட்சிக் குழுவையும் வேறு தேசிய இராணுவ அமைப்புக்களையும் தெய்வீக சக்தி எதுவும் இல்லாமலே நடத்த முடிந்தது. ஆனால் நூமாவுக்கு அவை அதிகம் தேவைப்பட்டன. நூமா தெய்வீக சக்தியைக் கையாளாமல் இருந்திருந்தால், அவனுடைய அருமையான நீதிமுறைகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அவன் தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றுவதற்காகத் தான் வன தேவதையொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி வந்தான். ரோமானியர்கள் நூமாவின் ஆலோசனைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டார்கள்.

பிளாரன்ஸ் தேசத்து மக்கள் அறியாமை மிகுந்தவர்களல்ல. இருந்தாலும், ஜீரோலாமோ சாவனரோலா தான் கடவுளுடன் பேசியதாக அவர்களை நம்பச் செய்தான். இது உண்மையா பொய்யா என்பதைப் பற்றி நான் இப்போது பேசப் போவதில்லை. ஆனால், ஏராளமானவர்கள் அதை நம்பினார்கள். அவர்கள் நம்புதற்குரிய அதியற்புதமான அசாதாரண நிகழ்ச்சிகள் எதையும் அவர்கள் காணாவிட்டாலும் கூட, அவனுடைய வாழ்க்கைத் தூய்மையையும், உபதேசமொழிகளையும், அவன் பேச எடுத்துக்கொண்ட விஷயங்களையும் கண்ட மக்கள் அவனை நம்பத் தயங்கவில்லை. எல்லோரும் பிறப்பதும் இறப்பதும் ஒரே மாதிரிதான். ஆகவே யாவரும் ஒருவரைபோல் ஒருவர் இருக்கிறோம் என்பதிலும் ஐயமில்லை. எனவே மற்றவர்களால் செய்யப்பட்ட இது போன்ற காரியத்தை நம்மால் செய்ய முடியுமா என்று யாரும் பயப்படத் தேவையில்லை.

விடுதலையுற்ற அரசின் எதிரிகள் :

நெடு நாளாக அடைத்தே வைக்கப்பட்டிருந்த காட்டு மிருகம் ஒன்று, கூட்டைத் திறந்து விட்டவுடன் வெளியே பாய்ந்தோடி, தனக்கு உணவும் உறையுளும் தேடிக்கொள்ள வகையற்றதாய்த் திரியும்போது, அதைப் பிடித்துக் கட்டி வைப்பதற்குக் காத்திருக்கும் முதல் ஆளிடம் மீண்டும் அகப்பட்டுக் கொள்வது போன்ற நிலையில்தான், சந்தர்ப்ப வசமாக ஓர் அரசனின் ஆட்சிக் கொடுமையிலிருந்து விடுதலையுற்ற மக்கள் இருக்கிறார்கள்.