பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

உத்தியோகஸ்தர்களைப் பனிரெண்டு பேருக்கதிகமாக நியமிக்கவில்லை. ஏனெனில் அரசன் பனிரெண்டு உத்தியோகஸ்தர்களையே வைத்திருந்தான். தவிரவும் ரோமானியர்கள் ஆண்டுதோறும் பலி கொடுக்கும் திருநாள் ஒன்றை நடத்தி வந்தார்கள். இதை அரசனே நேரில் சென்று நடத்தி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. அரசனில்லாததால் தங்கள் பரம்பரைப் பழக்கவழக்கங்கள் மாறிவிட்டதாக மக்கள் குறைப்பட்டுக் கொள்ளக் கூடாதென்று எண்ணிய அரசியல்வாதிகள், இந்தச் சடங்கைச் செய்வதற்காகப் பலியரசன் என்ற பெயரில் ஒரு விசேஷத் தலைவனை உண்டாக்கினார்கள். அவனுக்குத் தங்கள் மதகுருவிற்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றினார்கள். புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்தமுறையைக் கையாள வேண்டியது இன்றியமையாதது. ஆனால், பழங்காலத்து ஆசிரியர்கள் கொடுங்கோலர்கள் என்று குறிப்பிட்டபடி சர்வாதிகாரமாக, நடக்க எண்ணுபவர்கள் எல்லாவற்றையும் அடியோடு மாற்றித்தான் ஆக வேண்டும்.

புதிய அரசன் முழுக்க முழுக்கக் கெட்டவனாயிருக்க வேண்டும்.

புத்தம் புதிதாக ஒரு ராஜ்யத்திற்கு அல்லது நகரத்திற்கு அரசனாக வருகிறவன். முக்கியமாக அவனுடைய அதிகாரத்தின் அடிப்படை பலமற்ற நிலையில் இருக்கும் சமயத்தில் அவன் ஒரு குடியரசையோ அல்லது முடியரசையோ ஏற்படுத்த விரும்பாத நிலையில் அவன் அந்த அரசாங்கத்தை முற்றிலும் புதிய முறையில் நடத்துவது சிறந்த வழியாகும். அதாவது, அவன் புதிய பட்டங்களும், புதிய அதிகாரங்களும் கூடிய புதிய ஆட்சித்தலைவர்களை நியமிக்க வேண்டும். புதிய மனிதர்களை உண்டாக்க வேண்டும். ஏழைகளைப் பணக்காரர் ஆக்க வேண்டும். பணக்காரர்களை மொட்டையடிக்க வேண்டும். இதுவும் தவிரப் பழைய நகரங்களை அழித்துப் புத்தம் புதிய நகரங்களை உண்டாக்கவேண்டும். ஓரிடத்தில் இருக்கும் குடிமக்களை மற்றோரிடத்திற்குக் குடியேறச் செய்யவேண்டும். தன் ஆட்சிக்குட்பட்ட, பட்டம், பதவி, செல்வம், மரியாதை, இடம், ஊர், மக்கள் ஆகிய எதுவும் மாறுபடாமல் இருக்கும்படி விடக்கூடாது. அலெக்ஸாண்டரின் தந்தை பிலிப் இப்படித்தான் சாதாரணச் சிற்றரசனாக இருந்து