பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

சர்வாதிகாரம் எப்பொழுதும் ரோமாபுரிக்கு நன்மையையே ஏற்படுத்தியிருக்கிறது. முறைப்படி ஏற்படுத்தப்பட்ட எந்தச் சர்வாதிகாரியும் ரோமாபுரிக் குடியரசுக்குப் பயன் கொடுக்கத் தவறியதே கிடையாது.

இதற்குக் காரணம் தெளிவானது. ஒரு குடிமகன் அசாதாரணமான அதிகாரமுடையவனாவதற்கு முன்னால் பல காரியங்கள் நடக்க வேண்டியிருக்கின்றன.

சர்வாதிகாரியாக வரக்கூடியவன் பெரும் பணக்காரனாக இருக்கவேண்டும். பக்கத் துணையாகவும் அனுசரணையாகவும் இருக்கக்கூடிய பலர்தன் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும். நீதிமுறைகள் கண்காணிக்கப்படுகிற நாட்டில் இது நடைபெறாத காரியம். அப்படியே அவன் கட்சி சேர்த்துக் கொண்டவனாயிருந்தால், பொதுமக்கள் அவனை ஓர் ஆபத்தான ஆசாமியாகக் கருதுவார்கள். ஆகையால் அவர்களுடைய ஆதரவு அவனுக்குக் கிடைக்காது. மேலும் சர்வாதிகாரிகள் குறிப்பிட்ட கால வரையறையளவே நியமிக்கப்படுவார்கள். அந்தக் குறிப்பிட்ட கால அளவிற்கே அவர்கள் அதிகாரம் செல்லுபடியாகும். ஆபத்துக் காலத்தில் நியமிக்கப்படுகிற சர்வாதிகாரி, அவசரத்தை முன்னிட்டு யாருடைய யோசனையையும் கேளாமல் தனக்குச் சரியென்று தோன்றுகிறபடி எதுவும் செய்யலாம். எவருடைய முறையீட்டையும் கேட்காமல் அவர்களைத் தண்டிக்கலாம். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யலாமே தவிர, அரசாங்கத்தில் எவ்விதமான மாறுதலையும் செய்யவோ, ஆட்சிக்குழு அல்லது மக்களின் அதிகாரத்தைக் குறைக்கவோ, இருக்கின்ற அமைப்புக்களை ஒழித்துக் கட்டிவிட்டுப் புதிய அமைப்புக்களை உண்டு பண்ணவோ, ஒரு சர்வாதிகாரியால் முடியாது. குறிப்பிட்ட கால அளவுக்கு வரையறுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் நின்று செயலாற்றும்படி நியமிக்கப்பட்ட சர்வாதிகாரிகளால் ரோமாபுரிக் குடியரசு நன்மையடைந்ததே தவிர எவ்விதமான தீமையும் அடையவில்லை.

வேனில் குடியரசில், குடிமக்களில் ஒரு சிலர், அவசரமான காரியங்களில் பெரிய ஆலோசனை சபையைக் கலக்காமலே முடிவு செய்யும் அதிகாரம் உடையவர்களாய் இருந்தார்கள். இப்படிப்பட்ட ஏதாவதொரு முறையில்லை யானால் நீதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுகின்ற எந்தக் குடியரசும் அழிந்துவிடும். அப்படி அது அழியாமல்