பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

காப்பாற்ற சட்டத்தைச் சட்டை செய்யாமலாவது இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும், எந்தவிதமான அவசர நிலைமைக்கும் பொருந்தக்கூடிய நீதி முறையில்லாத எந்தக் குடியரசும் பூரணமானதல்ல. முடிவாகச் சொன்னால், ஆபத்தான அல்லது இக்கட்டான சமயத்தில் சர்வாதிகாரம் அல்லது அதைப்போன்ற ஏதாவது ஓர் அதிகாரத்திற்கு உட்படாத எந்தக் குடியரசும் பொதுவாக அழிந்துவிடும் என்றே கூறவேண்டும்.

உயர்பதவியிலிருந்தவன் கீழான பதவியையும் ஏற்கவேண்டும்:

ரோமாபுரிக் குடியரசின் தலைமை அதிகாரியாய் இருந்த குவின்டஸ் பேபியஸ் சேனைத் தலைவனாக மாறினான். ஒரு மகத்தான போரில் தன் தேசத்திற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துத் தன் உயிரையும் இழந்தான். ரோமானியர்கள் கீர்த்தியிலும் புகழிலும் பெரு நாட்டமுடையவர்களாயிருந்த போதிலும், தங்கள் அதிகாரத்திற்குட்பட்டிருந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை அவமானமாகக் கருதவில்லை என்பது இதிலிருந்து நமக்குத் தெரிகிறது. இந்த வழக்கம் நம்முடைய காலத்துப் பழக்கத்திற்கும் விதிமுறைக்கும், கருத்துக்கும் முற்றிலும் மாறானது. வேனிசில் பெரும்பதவியில் இருந்த ஒருவன் கீழ்ப்பதவியை ஏற்கும்படி சொல்லப்படுவதே அவனை அவமானப்படுத்துவதாகும் என்று கருதப்பட்டு வந்திருக்கிறது. தனிப்பட்ட மனிதனைப் பொறுத்தவரையில் இந்தப் பெருமை பாராட்டுவதில் அர்த்த முண்டு. ஆனால் பொதுமக்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் பயனற்றதேயாகும். வேனிசையும் மற்ற புதிய அரசுகளையும் போல, ரோமாபுரியிலும் ஒரு முறை ஆட்சித் தலைமைப் பீடத்தில் இருந்தவன் அதற்குக் கீழ்ப்பட்ட பதவியொன்றை ஏற்றுக்கொள்ள முடியாதென்று மறுத்தால், அதனால், பல குழறுபடிகள் பெரிதும் பொது உரிமையைப் பாதிக்கக் கூடிய வகையில் நடந்திருக்கும்.

நிலவரம்புச் சட்டம்:

மனிதர்கள் தேவைக்காகப் போராடுகின்ற நிலை போன பிறகு தங்கள் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். அந்தப் பேராசை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குப் போன பிறகும் கூட அது அவர்கள் இதயத்தை