பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

விட்டுப்போவதில்லை. இதற்குக் காரணம் என்னவென்றால் இயற்கை, மனிதர்களை எல்லாவற்றிற்கும் ஆசைப்படக் கூடியவர்களாகவும், ஆனால், அவற்றையெல்லாம் அடைய முடியாதவர்களாகவும் படைத்திருக்கிறது. தேடுகின்ற சக்தியைக் காட்டிலும் எப்பொழுதும் ஆசை பெரிதாயிருக்கிறது. தாங்கள் அடைந்திருப்பது போதாது என்றும் அதனால் மனக்குறையும் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் செல்வ நிலையில் மாறுதல் ஏற்படுகிறது. சிலர் தாங்கள் வைத்திருப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பெற விரும்புகிறார்கள். அதேசமயம் மற்றவர்கள் தாங்கள் வைத்திருப்பதை இழக்கப் பயப்படுகிறார்கள். இதன்பயனாகப் பகைமையும் போரும் உண்டாகின்றன. இதனால் ஒரு நாடு அழிந்து மற்றொரு நாடு ஏற்றம் பெறுகிறது. இவற்றையெல்லாம் நான் ஏன் குறிப்பிடுகிறேனென்றால் ரோமானிய மக்கள் பிரபுக்களை எதிர்த்துத் தங்கள் பிரதிநிதிகளை ஏற்படுத்தியதோடு மனத்திருப்தி அடையவில்லை; இந்த நிலைக்கு வந்த பிறகு அவர்கள் பேராசை வயப்பட்டுப் போராடத் துவங்கினார்கள். பிரபுக்கள் பெரிதாக மதிக்கின்ற அவர்களுடைய உடைமைகளையும் செல்வாக்கையும் பங்கு போட்டுக்கொள்ள மக்கள் விரும்பினார்கள். இதன் காரணமாக எழுந்த நிலவரம்புச் சட்டத்தை முன்னிட்டு உன்மத்தமான போராட்டம் எழுந்தது. இறுதியில் ரோமானியக் குடியரசின் அழிவுக்குக் காரணமாக இருந்தது இந்த நிலவரம்புச் சட்டமேயாகும்.

இந்தச் சட்டத்தின்படி ஒரு குடிமகன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது. பகைவரிடமிருந்து பெறும் நிலத்தைக் குடிமக்கள் எல்லோருமே பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஏற்பட்டது. இது இருவகையிலும் பிரபுக்களைப் பாதித்தது. பிரபுக்கள் அனைவரிடமும் அதிகமான நிலமிருந்தது. குறிப்பிட்ட அளவுக்குமேல் இருந்த நிலங்களை அவர்கள் இழக்கவேண்டியிருந்தது. இரண்டாவதாகப் பகைவரின் நிலங்களைக் கொண்டு தங்கள் செல்வத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் இழக்கவேண்டியிருந்தது. இதனால் தான் அவர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்தார்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமுன் பிரபுக்கள் மிகவும் பொறுமை காட்டினார்கள். ஒரு படைப்பிரிவையோ, அல்லது மக்கள் பிரதிநிதி ஒருவனையோ கொண்டு இந்தச் சட்டத்தை எதிர்க்கும்படிச் செய்து பார்த்தார்கள்.