பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

ஆளாகியிருந்த ரோமானியர் தாங்கள் உதவிக்கு வரக்கூடிய நிலையில் இல்லாததால் அவர்கள் தாங்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியது தான் என்று கூறிவிட்டார்கள். ரோமானிய ஆட்சிக்குழுவின் புத்திசாலித் தனத்தையும் நல்லெண்ணத்தையும் நாம் இந்த நிகழ்ச்சியில் இருந்து அறிகிறோம்.

வேறு சமயங்களில் பகைவர் படையெடுத்தபோது அந்த மக்கள் போராடக் கூடாதென்று தடுத்த அதே ஆட்சிக்குழுவினர் இப்போது சந்தர்ப்பத்தையொட்டி அவர்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டனர். அவர்கள் அவ்வாறு கூறாவிட்டாலும் அந்த மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தாங்களே போராடித் தீரவேண்டிய நிலையில் தான் இருந்தார்கள். இதிலே கவனிக்க வேண்டியதென்ன வென்றால், ரோமானியர் உதவி செய்யக்கூடாத நிலையில் இருந்தபோதிலும், தங்கள் அனுமதியின் பேரில் அந்த லத்தீன் காரர்களும், ஹெர்னீசியர்களும் போருக்குச் சென்றனர் என்று பேர் பண்ணியதுதான். அவர்கள் அவ்வாறு அனுமதித்ததாகக் காட்டிக்கொள்ளாவிட்டால் ஒருமுறை அவர்கள் உத்தரவின்றி ஒரு காரியத்தைச் செய்த மக்கள் அதையே வாடிக்கையாகக் கொண்டு விடுவார்கள். எல்லாச் சமயத்திலும் அவர்கள் தம் விருப்பப்படி நடக்காமல் செய்வதற்கு இந்தச் சூழ்ச்சி அல்லது ராஜதந்திரம் பயன்பட்டது.

வாலென்டினோ கோமகன் பாஎன்சா, போலோகனா ஆகியவற்றை அடிப்படுத்திவிட்டு ரோமாபுரிக்குத் திரும்பும் வழியில் துஸ்கானி வழியாக கடந்து செல்ல வேண்டியிருந்த எல்லையில் தன் படையுடன் செல்ல அனுமதி கேட்டுப் பிளாரென்சுக்கு ஆளனுப்பினான். பிளாரென்சு அதிகாரிகள் ஓர் ஆலோசனை சபை கூட்டினார்கள். அனுமதி கொடுக்கலாமென்று யாரும் யோசனை கூறவில்லை. கோமகனோ பெரும் படையுடன் வந்திருந்தான். பிளாரென்ஸ் காரர்களிடமோ போதிய படை கிடையாது. இந்தச் சந்தர்ப்பத்தில், அவர்கள் கோமகனுக்கு அனுமதி கொடுத்திருந்தால் அவர்களுக்குப் பெருமையாக இருந்திருக்கும். கோமகன் பலவந்தமாக அதைக் கடந்து சென்றதால் அவர்களுக்குப் பெருத்த அவமானந்தான் மிஞ்சியது.