பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

நம்பிக்கையும் உறுதியும் இல்லாத குடியரசுகள், புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது கிடையாது. அவற்றின் பலவீனம்தான் அவற்றைச் சரியான முடிவுக்கு வராமல் தடை செய்கின்றன.

சலுகை காட்டுவது போல் சுமையை ஏற்றும் முன்யோசனைக்காரர்கள் :

ரோமானிய படைவீரர்கள், தங்கள் வாழ்க்கைச் செலவுகளைத் தாங்களே தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்படிப்பட்ட நிலையில் போரை நீடித்த நாள் நடத்துவதென்பதோ தூரப் பிரதேசங்களுக்குப் படை நடத்திக் செல்லுவதென்பதோ முடியாத காரியம் என்பதையுணர்ந்த ஆட்சிக் குழுவினர், படை வீரர்களுக்குப் பொதுப் பணத்தில் இருந்து சம்பளம் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். தேவையை உத்தேசித்துச் செய்த இந்தக் காரியம் அவர்களுக்குக் கீர்த்தி தரும்படியான முறையில் அவர்கள் செய்தார்கள். இந்தச் சலுகையைக் கேட்ட மக்கள் இதனால் தங்களுக்கு ஏதோ எதிர்பாராத பெரிய இலாபம் வரப் போவதாக எண்ணிப் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். இதனால், மக்களின் மேல் பெருஞ்சுமை ஏற்றப்படுகிறதென்று மக்கள் பிரதிநிதிகள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், ஆட்சிக் குழுவின் முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டதைப் பிரதிநிதிகளால் தடுத்துவிட முடியவில்லை. பின்னால், ஆட்சிக் குழுவின் வரிகளை அதிகப்படுத்திய போது இந்தச் சுமை மேலும் அதிகரித்தது. முன்யோசனையுள்ளவர்கள் தங்கள் செயலின் மூலம் சந்தர்ப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுபவர்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. தேவையை முன்னிட்டு ஒரு குறிப்பிட்ட முறையைக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் தங்கள் தாராள மனப்பான்மையால் அதைச் செய்ததுபோல் காட்டிக் கொள்வார்கள் அறிவாளிகள்.

பொதுமக்களின் புத்திசாலித்தனம்! :

வெயின்டி நகரைக் கைப்பற்றிய பிறகு ரோமானிய மக்கள், ரோமாபுரியில் வாழ்பவர்களிலே சரிபாதிப் பேர் அங்கு போய்க் குடியேறி வாழ்ந்தால் நல்லது என்று எண்ணினார்கள். வெயின்டி நகரில் நிறைய நிலபுலங்களும், வீடுகளும் இருந்ததோடு ரோமாபுரிக்கு அருகிலேயே