பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

97



873. “தன் காரிய நோக்குடைய சுயநலமிகள், அடுத்தவர் வீட்டை இடித்துத் தன் வீட்டைக் கட்டுவர்.”

874. “நடைமுறைச் சில்லறைச் செலவுகளில் கவனம் மூலதனத்தைக் காப்பாற்ற உதவும்.”

875. “கண்ணுக்கும் கருத்துக்கும் வராது மறைந்து கொண்டிருக்கும் பணிகளைத் தேடிச் செய்வதேபணி.”

876. “உன்னிடமுள்ள பணிகளில் நீ செய்ய வேண்டிய நிலையானதைத் தேர்ந்தெடுத்து உடன் செய்.”

877. “பிறர் சொல்வதைக் கேட்டுச் சிந்திக்காதவர்கள் மூர்க்கர்களாகவே இருப்பர்.”

878. “நமக்கு வாய்ப்புக் கொடுக்காமலே நம்மீது பழி சுமத்துபவர்கள் உண்டு. விழிப்பாக இரு.”

879. “நமது செயற்பாட்டில் - மற்றவர்கள் உணர்வு பூர்வமாக ஈடுபாடு கொள்ளச் செய்வதிலேயே வெற்றி இருக்கிறது.”

880. “நல்லவர்கள் வல்லவர்களாக இருந்தால் தான், காரியம் நிகழும்.”

881. “சாதாரணமாக மக்கள் எளிதில் உண்மை நிலைக்கு வருவதில்லை.”

882. “சுவை, உண்ணும் கிளர்ச்சியைத் தருகிறது. ஆனால், நன்மை பயப்பதில்லை.”

883. “புலால் உணவைத் தவிர்க்கக் கூடிய வழிபிரான்னிகளை விருப்புடன் வளர்த்தலேயாம்.”

884. “ஊக்கத்துடன் செய்யப் பெறாத வேலை, அரை வேலை.”

த-7