பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

தவத்திரு அடிகளார்



15. “ஒரு பொருளின் மதிப்பை மேலும் கூட்டுவது எதுவோ, அதுவே உழைப்பு என்றழைக்கப்பெறும்”.

16. “தாழ்வான கூரை உள்ள வீட்டில் எளிதில் தீப்பிடிக்கும். அதுபோல தாழ்வான நோக்கங்கள் உடையவர்கள் எளிதில் பகை கொள்வர”.

17. “நம்பிக்கை என்பது நடைமுறையில் தோன்றி வளர்வதேயாம்”.

18. “தனி உடைமைச் சமுதாயம் இருக்கும் வரையில் அதற்கு இசைந்தாற் போல் பற்றாக்குறையும் இருக்குமானால் அழுக்காறும் அவாவும் மனிதனை ஆட்டிப்படைக்கும்”.

19. “பொறுப்புடன் கடமைகளைச் செய்கிற பொழுது கலந்து பேச வேண்டிய வாயில்கள் இயல்பாகவே தோன்றும். இவ்வாயில்கள் ஒருவருடைய பண்பை, திறமைகளை அறிமுகம் செய்து வைத்து உறவுகளை வளர்க்கும்”.

20. “தமிழ் மொழி ஆசிரியர்கள், சிற்றுார்கள், பேரூர்கள் தோறும் பரவி, பணியில் அமர்ந்த பிறகும் தமிழர்களிடையில் தமிழ் உணர்வும் குறைந்திருப்பது வருந்தத்தக்கது. இதனால், நம்முடைய மொழி உணர்வு கானல் நீரைப் போன்றது என்பது உறுதிப்படுத்தப்பெறுகிறது”.

21. “கருத்து வேற்றுமைகள் தவிர்க்க இயலாதன, ஆதலால் கருத்து வேற்றுமைகளைக் காழ்ப்புகளுக்குரிய முரண்பாடுகளாக எடுத்துக்கொண்டு வெறுப்பையும் பகையையும் வளர்த்தல் அறிவியல் முறையும் அன்று; நாகரிகமும் அன்று”.