பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

163



1603. “செல்வம் இருப்பதும் தீது; இன்மையும் தீது-அதனால் செல்வம் தேடிப் பெறுவதாகவும்-தேவைக்குத் தேடுவதாகவும் இருத்தல்வேண்டும்.”

1604. “காலத்தவனை நிர்ணயம் இல்லாத எதுவும் பயன் தராது - முடியவும் முடியாது.”

1605. “விழுந்து - விழுந்து, தஞ்சாவூர் பொம்மை எழுந்திருக்கலாம். ஆனால், மனிதன் கூடாது.”

1606. “இந்திய நாட்டில் அரசியலை குடும்பச் சொத்தாக ஆக்கும் ஆர்வம் வளர்ந்து வருகிறது; இது நல்லதல்ல.”

1607. “வேறுபாடுகள் உடையனவற்றில் இன்பம் துய்த்து மகிழும் மனித உலகம், ஏன் கொள்கை வேறுபாடுகளையும், அப்படிக் கருதவில்லை.”

1608. “இயற்கையின் இயக்கமே ஒரு கூட்டமைப்புள்ள இயக்கம்.”

1609. “நிலத்தால் மனிதனுக்குப் பெருமை இல்லை; மனிதனால் நிலத்துக்குப் பெருமை.”

1610. “அரசியல் கட்சிகள், ஆட்சியமைப்பில் ஊடுருவிச் செயற்படும் வரையில் லஞ்சம் ஒழியாது.”

1611. “சார்புகள் வழிப்பட்ட அன்பு, வரவேற்கத் தக்கதல்ல.”

1612. “தெருவைத் தூய்மையாக வைத்துக் கொள்ளாதார், “தேசியம்” பற்றி வாய் கிழியப் பேசுகின்றனர்.”

1613. “எந்த ஒன்றும் வழிவழித் தடத்தில் சென்றால் நன்மை விளையாது.”

1614. “மாற்றங்கள், உறவை, வளர்ச்சியைப் பாதிக்காது.”