பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு அடிகளார்



1667. “ஒரு தமிழன் ஞானியாக விளங்குதலை பார்ப்பனர் மதத் தலைவர்கள் ஏற்கமாட்டார்கள்.”

1668. “சாதாரண வைக்கோல் கூட ஒரு மகிழ்வுந்துப் பயணத்தைத் தடுத்துவிடுகிறது. ஆதலால் கேட்டினைச் செய்ய சிறியோராலும் இயலும்.”

1669. “அரசியல் கட்சி ஊர்வலத்தை, கடமையை விட உயர்ந்ததாகக் கருதுபவர்களால் அரசியலுக்கும் பயன் இல்லை; கடமை உலகத்துக்கும் பயன் இல்லை.”

1670. “தூங்குதலும் உழைப்பாளிகளுக்கு ஒரு விதக் கடமையேயாகும்.”

1671. “சிக்கலே இல்லாத இடத்திலும் சிலர் விதி முறையை மீறுகின்றனர். ஏன், பழக்கத்திற்கு அடிமைப்பட்ட நிலை.”

1672. “எல்லோருக்கும் எல்லாவற்றிலும் ஈடுபடுதல் பயனற்றவைகளையே வளர்க்கும்.”

1673. “முயற்சியின் வாயிலில் முதல் அடி கூட எடுத்து வைக்காதார் முடியவில்லை என்று கூறுவது ஏற்க இயலாத ஒன்று.”

1674. “கல்வியில் ஆர்வம் உடையார் கூழுக்கும் கஞ்சிக்கும் வெட்கப் படமாட்டார்.”

1675. “படித்தவர்களிடம் கூட சமூக வாழ்நிலை உணர்வுகள் கால்கொள்ளவில்லை.”

1676. “நமது நாட்டில் அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களில் பாதிப்பேர் பதவிகள் - பெருமைக்கே! அரசியல் நடத்த அல்ல."