பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

9


56. “சமய வேற்றுமைகளைக் கடந்த நிலையிலேயே “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற முழக்கம் தோன்றுகிறது.”

57. “முறைகேடான அரசுகளைத் தாங்கிக் கொண்டு வாழ்தல் கேவலம்; அடிமைத்தனம்.”

58. சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கானா விட்டால் புதிய சிக்கல்கள் தோன்றும்.

59. திறந்த வீட்டுக்கு நல்ல காவல் தேவை. அதுபோல காதுகளைத் தருவதில் கவனம் தேவை.

60. காலத்திற்குரிய கடமைகள், வேலைகள் இல்லாதிருப்போர் கெட்டுப் போதல் இயற்கை.

61. “தேவைக்குத் தேடுதல் என்பது வாழ்க்கை யல்ல. அறிவறிந்த ஆள்வினையால் தேடிச்சேர்க்கும் அளவுக்குப் பொருள் சேர்த்தல் வேண்டும். பின் நுகர்வுத் தேவைக்கு ஏற்றவாறு எடுக்கவேண்டும். இது வாழ்க்கை முறை.”

62. “அலுவலகத்தில் பல பதவிகள் இருப்பதன் பயன், பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படுவதுதான். மேல்நிலைப் பதவியிலிருப்பவர்கள் தவறுகளுக்கு மற்ற வர்களையே குறை சொல்லிக் கொண்டிருந்தால் போதாது, அவர்கள் பொறுப்பு தவறுகள் வராமல் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தலேயாம்.”

63. “உடனடியாகக் கிராமப்புற இளைஞர்களுக்கு ஊதியத்துடன் இணைந்த வேலைவாய்ப்புத் தேவை. அது இயலாதெனின் முறையான பொழுதுபோக்கிற் குரிய பணிகளிலாவது இவர்களை ஈடுபடுத்தியாக வேண்டும். இதற்கு, சாரணர் இயக்கம் துணை செய்யும்.”