பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

31



இறைவா! பொருளற்ற பொக்கையானேன்! எடுத்தாள்க!”

223. “நானிலத்தை இயக்குவது நன்றி. நன்றியில் வளரும் நட்பு. நன்றி நல்லதே படைக்கும், உளம் இழந்த உணர்விழந்த வாயினால் சொல்வதன்று நன்றி. வாழ்க்கையின் படைப்பாற்றலில் நிற்பது நன்றி.”

224. “ஒருவர் திரும்ப திரும்ப ஒரே தவறைச் செய்தால் அது வேண்டும் என்றே செய்யப் பெறுவதாகும். இத்தகையோர் உறவு பயனற்றது.”

225. “ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவர்களிடமிருந்து நீ தப்புவதே உன்னைச் காப்பாற்றிக் கொள்ளும் வழி.”

226. "சமய அனுபவங்களின் தரத்தை அளந்து காட்டும் அளவுகோல் நாகரிகமே”

227. “உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல் எளிதான காரியமன்று. இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் மூவுலகையும் ஆண்டு அனுபவிக்கலாம்.”

228. “வாழ்க்கைக்குரிய விலை கொடுக்காமல் வாழ ஆசைப்படுவது விபசாரத்திற்குச் சமம்”.

229. “நல்லெண்ணம்” என்பது ஒருவழிப்பயணம் அல்லவே! இருபாலும்தானே!”

230. “ஒரு தடவை கெட்டவர்கள் கெட்டே போய்விட மாட்டார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆகலாம். ஆனால் தமது நிலையை எண்ணி வருந்துகிறவர்களாக இருத்தல் வேண்டும்”

231. “எந்த ஒன்றையும் அறிவோடு உணர்வோடு எடுத்துக்கொள்கிறவர்கள் தவறு செய்யமாட்டார்கள்”.