பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

37276. “இன்புறும் வேட்கை மிருக வேட்கை; இன்புறுத்தல் அருள் தழிஇய வேட்கை”.

277. “ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வளரத் தூண்டி துணை செய்கின்ற நெம்புகோல்கள் போன்ற தோழர்கள் அவசியம் தேவை”.

278. “பெண்மைக்கு அனைத்துலகிற்கும் தாய்மை நிலை தாங்கும் பேருள்ளம் தேவை”.

279. “பொறுப்புக்களை உணராதவர்கள் ஒரு நூறுபேர் இருந்தாலும் பயன் இல்லை”.

280. “கீழ் மக்கள் கீழ் மக்களே! அவர்களைத் திருத்துதல் அரிது என்ற பழமொழி உண்மையே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் வளரும் அறிவியல் உணர்வு மறுக்கிறது”.

281. “சாதாரணக் காலங்களில் நாடாதவர்கள் பணம் தேவைப்படும்பொழுது மட்டும் வந்துவிடுகிறார்கள்”.

282. “விதிகள், முறைகள் தவிர்க்க இயலாதவை இவைகளைத் தவிர்க்க விரும்புபவர்கள் ஒழுக்கக் கேடர்களாகத்தான் இருக்கவேண்டும்”.

283. “நாள்தோறும் காசுகளை எண்ணிக் கூட்டி வைத்துப் பழகினால் செல்வம் பெருகும்”.

284. “அறிவு, அன்பு, ஒழுக்கம் - இவை செயலாக்க வடிவம் பெற்றால்தான் பயன் உண்டு”.

285. “தனித்தமிழ் பேணுவதில் கொங்குநாடு புகழ்பெற்றது”.

286. “நாள்தோறும் பழக்கவழக்கங்களை ஆராய்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல் வேண்டும்”.