பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு அடிகளார்



367. “நிதியியல் நாகரிகம் நுணுக்கமானது. அதனைக் கையாளத் தெரியாததே நமது துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.”

368. “காலத்தில் செய்யும் எந்தப் பணியும் பயனுடையது.” பணிகளை முறையாகப் பயன்படும் வகையில் செய்வது உரிமையாகவும், உரிய ஊதியத்தினை எடுத்துக் கொள்வது கடமையாகவும் மாறுதல் வேண்டும்.

369. “தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் நல்லவர்கள் அல்லர்.”

370. “வாழ்க்கையின் இயக்கம் ஊக்கத்தின் விளைவே. ஊக்கமிலாதார் சாதனைகளுக்கு ஆகார்.”

371. “பெருமைக்குரிய யாதொரு இயல்பும் இல்லாமல் பெருமை பாராட்டுதல் கூடாது.”

372. “பணத்தின் மீது நேரிடையாக ஆசை காட்டுவது தீது, பணம் வரும் வாயில்களில் ஆர்வங் காட்டுவது அறிவுடைமை.”

373. “நாட்டில், எல்லாம் பணமாகிவிட்டது. இனி ஏது ஏழைகளுக்கு வாழ்க்கை?”

374. “இன்று பலர் வைக்கோல்போரில் நாய் போல வாழ்கின்றனர். அதாவது, தாமும் வாழார். மற்றவர்களையும் வாழ விடார்!”

375. “ஏழ்மைக்குத் தகுந்த அளவு சிறுமைகளும் இருக்கும், சிறுமை கண்டு சீறாமல் சிறுமையை வளர்த்த ஏழ்மையை அகற்றவேண்டும்.

376. “மூன்றுகால் ஒட்டம் தொடர்ந்து ஓட முடியாது. பாண்டிச்சேரியாகிவிடும்.”