பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

59



488. “பெய்யும் மழைநீர், முறைப்படுத்தப் பெறாது தன்போக்கில் ஒடுமானால் நில அரிப்பு ஏற்படுகிறது. அதுபோல், தோன்றும் எண்ணங்கள் எழுச்சிகள் முறைப்படுத்தப் பெறாது போனால் சமுதாய அரிப்புகளாகிய சுரண்டல், கலகம் தோன்றும்.”

489. “மிக எடுப்பான உடம்பில் கூட ஒரு சிறு நோய் வந்துற்றால் உடம்பு இயங்க மறுக்கிறது. அது போல மானிடச் சமுதாயத்தில் ஒர் உறுப்பு இயங்காது போனாலும், சமுதாய இயக்கம் முழுமையாகாது.”

490. “நோயுற்றால் காட்டும் அக்கறையை நோயுறாது வாழும் நெறியில் யாரும் காட்டுவதில்லை.”

491. “முன்னேற்றத்தன்மை உடைய வாழ்க்கை வேண்டும் என்ற விருப்ப ஆர்வம் இல்லாதாருக்கு வழங்கப்படும் எந்த உதவிகளும் பாழுக்கிறைத்தன வாகவே முடியும்.”

492. “வாழ்க்கையில் அறநிலைகளைப் பற்றிக் கவலைப்படாதார், கடவுள் வழிபாட்டில் காட்டும் ஆர்வம் பயன் தராது.”

493. “அமைதி என்றால் சண்டையற்ற தன்மை என்றுமட்டும் கருதக்கூடாது. நல்லெண்ணத்தின் அடையாளம் உடன்பட்ட கொள்கைகள் இணக்கமும், ஒத்துழைப்புத் தன்மையும் வாய்ந்த செயற்பாடுகள் பொருந்தினாலேயே அமைதியாகும்.”

494. “ஆன்மாவினிடத்தில் ஒளிரும் அறிவை, உடல் ஆதிக்கம் செய்ய அனுமதித்து விட்டால் அழிவு தானே வந்துவிடும்.”