பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

உலக உயிர்களில் உயர்ந்து செயலாற்றி மகிழும் பேறு, மனித குலத்திற்கு மட்டுமே இறைவன் அருளிய அருட்கொடை..

மனிதன், மனிதம் என்ற புனிதத் தன்மையுடன் வாழவும், வாழ்விக்கவும் மகான்களின் சிந்தனைகளே உறுதுணை.

உலகம் உய்யத் தோன்றிய மகான்கள், சித்தர்கள் அருளிய அருட் சிந்தனைகள், வாழ்த்கைக்கு வளம் தருவன. உயிர்க்கும், உள்ளத்திற்கும் உறுதி சேர்ப்பன. இம்மை, மறுமை நலன்களை அளிப்பன.

உண்பித்து உண், வாழ்வித்து வாழ், மகிழ்வித்து மகிழ் எனும் திருக்குறள் நெறி உலகெலாம் நிலவி மகிழ, நாளும் தன் தவானுபவத்தால் அப்பரடிகளாக வாழ்ந்து காட்டிய தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அருளிய அருட்சிந்தனைகளின் தொகுப்பே இந் நன்னூல்.

இச்சிறந்த சிந்தனைச் செல்வத்தை வாழ்வில் கொண்டு ஒழுகுவதே தமிழ் மாமுனிவர் அடிகளாருக்குச் செய்யும் சிறந்த கைம்மாறாகும். தொண்டே வாழ்வாய், வாழ்வே தொண்டாய் வாழ்ந்தும், வாழ்வித்தும், என்றும் தோன்றாத் துணையாக அருளும் அடிகளாரின் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.

தமிழ் மாமுனிவர் அடிகளாரின் திருவுருவிலும் திருவுளப் பாங்கிலும் முழுமதியென உலா வந்தருளி முத்தான முன்னுரை வழங்கி அருளும் தவத்திரு. பொன்னம்பல குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கும், ஆதீனப் புலவர் மாமனிதர் மரு. பரமகுரு அவர்கட்கும், மகிழ்வுரை அளித்துள்ள “மனிதநேயச் செல்வர்” புலவர் வீ. செ. கந்தசாமி அவர்களுக்கும், அணிந்துரை வழங்கியுள்ள மனிதநேய மாமணி தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுக்கும் என் நெஞ்சுகந்த நன்றி.

தியாகராயநகர்

என்றும் அன்புடன்

சென்னை-17

சீனி. திருகாவுக்கரசு