பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

75



637. “ஆண்களின் ஆதிக்கம் தலையெடுத்த பிறகு பெண்ணைப் பொருளாக்கினர்.”

638. “பெண்மை அருளும் தன்மையுடையது; அரவணைக்கும் தன்மையுடையது; பொறுப்பேற்கும் நெறியுடையது.”

639. “கருவை வளர்த்து உயர்நலம் சேர்த்து பிறப்பிக்கும் பெருந்தவம் பெண்பால் அமைந்ததே. அதுவே பெண் உயர்ந்தவள் என்பதற்குச் சான்று.”

640. “மனிதன் வாழ்க்கையின் கரையோரங்களைக் கடந்து ஆழ்நிலைப் பகுதிக்குச் சென்றாலே முழுமை யடைவான்.”

641. “தெப்பம் கையகத்ததாக இல்லாமல் போவதிலிருந்து பாதுகாக்கக் கரையில் நிற்பவர் கயிறு கட்டிப் பிடித்துக் கொள்வர். அதுபோல நாம் திசை தெரியாமல் போய்விடாதிருக்கக் கடவுளிடத்தில் நம்மை கட்டிப் போட்டுக் கொள்ளவேண்டும்.”

642. “தீய பழக்கங்களால் கெடுவதறிந்தும் தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெற முயலாதது இரங்கத்தக்கது.”

643. “தெப்பத்திற்கும், தெப்பக்குளத்தின் தண்ணீர் மட்டத்திற்கும் உள்ள இடைவெளி அளவை விட கம்பு நீளமாக இருப்பின் அக்கம்பு தெப்பத்தைத் தள்ளப் பயன்படாது. அதுபோல நிர்வாக அமைப்பை விட நிர்வாக இயந்திரம் பருத்துவிடின் நிர்வாகத்தை இயக்க உதவி செய்யாது.”

644. “ஒளி நிறைக் கதிரவனைக் கூட, நில உருண்டையின் நிழல் படிந்து மறைக்கிறது. அது போல, பேராற்றல்களும் கூட, தற்சார்பின் காரணமாக மறைந்து போகிறது.”