பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மகிழ்வுரை

வீ. செ. கந்தசாமி, எம்.ஏ., பி.லிட்., எல்.எல்.பி,
தலைவர், திருக்குறள் பேரவை, சென்னை மாவட்டம், தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணைய முதல் உறுப்பினர், துணைத் தலைவர், அ. இ. தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.


ஆன்மிகவாதியாகவும், அரசியல் ஞானியாகவும், அறிவியல் சிந்தனையாளராகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும் விளங்கி, இறையருளில் கலந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், மகேசனிடம் பக்தி பூண்டதோடு நில்லாமல், மக்களையும் உள்ளன்புடன் நேசித்தவர்.

அவர், காவியணிந்த பொதுவுடைமைவாதி. சமய வழியில் மக்களிடையே ஒப்புரவு காணமுடியும் என்று உறுதியாக நம்பியவர்.

மடமையையும், அறியாமையையும், மட்டுமல்ல வளர்ச்சிக்கு வகை செய்யாத பழமையையும் சாடிய சமுதாய சிற்பி.

இனிவரும் உலகில், அறிவியல் துறையில் ஒரு மொழி வளர்ச்சியடைவதே அம்மொழி பேசும் மக்கள் மேம்பாடடைவதற்கு வழி என்றுரைத்த நுண்ணிய அறிவியல் சிந்தனையாளர்.

ஒரு சைவ மடத்தின் மகா சந்நிதானமாக விளங்கிய அவர்கள், திருக்குறள் பேரவை, அருள் நெறித் திருக் கூட்டம் போன்ற பல இலக்கிய, சமுதாய, சமய அமைப்புகளைத் தோற்றுவித்து நடத்தியதுடன், பல கல்வி நிலையங்களையும், ஏதிலியர் இல்லங்களையும் நடத்தினர்கள்.