பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

87



763. “எந்த ஒன்றும் தவிர்க்க இயலாதது என்று ஆகிவிட்டால் அந்த அளவில் அடிமைத்தனம் வந்து விடுகிறது.”

764. “நல்லவர்களையே மெளனம் கவர்ச்சிக்கும், மற்றவர்களை ஆர்ப்பரவமே கவர்ச்சிக்கும்.”

765. “நாகரிகம் சீர்குலைந்த சமுதாயத்தில் பொய்ம்மையே வாய்மை.”

766. “உலகியல் பெயரால் அநீதிக்கும் உடன்பட வேண்டி வருகிறது.”

767. “பேய் அரசு செய்தால் பேரறமும் குன்று கிறது.”

768. “வாழ்க்கையின் தேவைகள் குறிக்கோள் ஆகா. வாழ்க்கையின் தேவைகளையும் கடந்தது குறிக்கோள்.”

769. “மனிதன் பழக்க வலையினின்று மீள மறுக்கிறான்.”

770. “பிரிவினைகளும் ஒரு வகையில் தீண்டாமையே.”

771. “பணம் கொடுப்பதைவிட, பணத்தை சம்பாதிப்பவனாக ஆக்குதல் உயரிய பணி.”

772. “மதம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அனுட்டானத்தில் இருந்தால் எப்போதும் அழியாது.”

773. “நல்லவர்களுக்கு இருக்கும் ஆற்றல், படைக்கும் ஆற்றல். கெட்டவர்களுக்கு இருக்கும் ஆற்றல், அழிக்கும் ஆற்றல்.”

774. “நன்மையைச் செய்தால் மட்டும் போதாது. யாருக்காகச் செய்யப்படுகிறதோ அவர்கள் நன்மையை அறிந்துகொள்ள வேண்டும்."