35. கார்நிறக் கோன் நானும் தோழர் க. அன்பழகன் அவர்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மூன்றாம் ஆனர்சு வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் மாலைப் பொழுதில், தில்லையில் அவரது வீட்டில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் புத்தாண்டு வகுப்புகள் துவக்கப்பட்டிருந்தன. அந்த நாட்களில், தோழர் அன்பழகன் அவர்களின் தந்தையார் தோழர் மணவழகனார் (கலியாண சுந்தரனார்) அவர்கள்தாம், இயக்கத்தின் நாள் - கிழமை -திங்கள் இதழ்களை வரவழைத்துப் பொதுமக்களிடம் இயக்கம் வளர்வதற்கான முறையில் பரப்பி வந்தார்கள். இயக்க இதழ்கள், இயக்க நூல்கள் வேண்டுமானால், எல்லோரும் தோழர் அன்பழகன் அவர்கள் வீட்டைத்தான் நாடுவார்கள். நாங்கள் உரையாடிக் கொண்டிந்தபோது, அல்லையாண்டு அமைந்த மேனி அழகர்" (கருநிற அழகர்) ஒருவர் திடீரென்று உள்ளே நுழைந்தார். அவர் குறுகுறுத்த பார்வையும், சுறுசுறுப்பான அசைவும், மிடுக்கான தோற்றமும் கொண்டவராய்க் காணப்பட்டார். அவருடைய நடை நொடி நடிப்புக்களிலிருந்து, அவர் ஒரு மாணவர் என்பதைப் புரிந்து கொண்டோம். 'இந்த வாரக் 'குடியரசு' இருக்கிறதா?" என்று அவர் ஆர்வமும் எழுச்சியும் கலந்த குரலில் கேட்டார்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/255
Appearance