பக்கம்:சிந்தனை மேடை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சிக்கு எளிமை

மனிதனுடைய நிகழ்கால வாழ்க்கையில் மிகக் குறைந்த காலம்தான் பணத்தினாலும் செல்வாக்கினாலும் அவனுடைய புகழ் கணிக்கப்படுகிறது. நிரந்தரமாகக் கணிக்கப்படுகிற புகழ் என்னவோ, குணங்களாலும், பண்பாடுகளாலும், ஒழுக்கத்தினாலும் கணிக்கப்படுகிறது.

செல்வமும், செல்வாக்கும் குணங்கள் அல்ல; குணங்கள் தாம் செல்வம் என்று நம்பி ஒப்புக் கொள்கிற புதிய சமுதாயம் உருவாக வேண்டும் என இலட்சியவாதிகள் எண்ணாத நேரமில்லை. பொது வாழ்விலும், சமூகத் தொண்டிலும் எளிமையும் சுமுகமான உறவுகளும் பயன்படுவதற்குப் பதிலாகப் பதவியும், போலி கெளரவமும் பயன்படுவதைக் கண்டு பல வேளைகளில் நாம் மனம் நோகிறோம். சமூகத்துக்கு மெய்யாகவே தொண்டு செய்ய விரும்புகிற உண்மை மனிதர்கள் 'பெனிசிலின்' மருந்து போல அருமையாகவும், கிடைக்க முடியாத உயரமும் கொண்டு பயன்பட வேண்டியவர்களுக்கு எட்டி நிற்காமல் சுக்குப் போல எல்லா இடத்திலும், எல்லார்க்கும் எப்போதும் எளிமையாகக் கிடைத்துப் பயன்படுகிற மனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இப்படிக் காட்சிக்கும், பழக்கத்துக்கும், எளிமையான மனிதர்களை இன்றுள்ள பொதுவாழ்வில் நாம் மிகமிகக் குறைவாகவே சந்திக்க முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/7&oldid=1319174" இலிருந்து மீள்விக்கப்பட்டது