பக்கம்:சிந்தனை மேடை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை (இந்தியன் ஏர்லைன்ஸ்) விமானத் துறை அலுவலக வாயிலில் கண்டவர்கள் வியக்கத் தக்கதொரு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று சென்னையிலிருந்து திருவனந்தபுரம் போக வேண்டிய மாலை விமானம் ஏதோ யந்திரக் கோளாறு காரணமாக மதுரையோடு நின்று போனதால் பிரயாணிகளை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்து நகரில் உள்ள விமானத்துறை அலுவலகத்தில் விட்டு விட்டார்கள்.

அப்படி விடப்பட்டவர்களில் ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியும் இருந்தார். தம்முடைய பெட்டி படுக்கைகளைத் தாமே சுமந்துகொண்டு, சிறிது தொலைவு இறங்கி நடந்த அந்த முதல் மந்திரி அந்தச் சில விநாடிகளில் தாம் ஒரு மெய்யான தொண்டர் என்பதை நிரூபித்தார். அன்று அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்தவர்கள் 'காட்சிக்கு எளிமை' என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். தாங்கள் நடந்து போகாமல் இருப்பதுதான் தங்களைக் கெளரவமும் செல்வாக்கும் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளுவதற்குச் சரியான அடையாளம் என்று நம்புகிற பெரிய மனிதர்களுக்கு நடுவே நிஜமான கெளரவமும், நிஜமான செல்வாக்கும், கால்கள் மண்ணில் நடப்பதால் மட்டும் குறைந்து விடாது. மனம் மண்ணில் நடக்காமல் பார்த்துக் கொண்டால் போதும் என்று நம்பும் துணிவை எங்கே பார்த்தாலும் அந்தத் துணிவுக்கு வணக்கம் செலுத்தலாம். அன்று மதுரை இந்திய விமானத் துறை அலுவலக வாயிலில் இப்படி வணக்கத்துக் குரியவராகத் தென்பட்ட மனிதர் திரு இ. எம். எஸ். நம்பூதிரிபாட் ஆவார்.


சுமுகமான உறவு
காட்சிக்கு எளிமை, கடுஞ்சொற்களைப் பேசாமை,என்ற இந்தக் குணங்களால்தான் ஒரு மனிதனுடைய பெருந்தன்மை கணிக்கப்படுகிறது. நம்முடைய நாவிலிருந்து பிறக்கும் சொற்கள் பிறருடைய செவிகளில் பூக்கள் உதிர்வதைப் போல அதிர்ச்சி உண்டாகாத வண்ணம் மெல்லச் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/8&oldid=1319428" இலிருந்து மீள்விக்கப்பட்டது