பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 155 பல வருடங்களுக்கு முன், மதுரை சர்வ கலாசாலை யில், என் எழுத்து பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கு நடந்தது. அதன் எதிரொலிப்பாக, சின்னாள் பொறுத்து Madura காலேஜில் ப்ரொஃபெலர்களுடன் ஒரு கலந் துரையாடல் ஏற்பாடாயிற்று. மற்ற கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்கள் வந்திருந்தனர். மொத்தம் சுமார் 40 பேர். நான் எழுத்தைப் பயில்பவன்; வாழ்க்கையின் கீதத்தைப் பாடிக்கொண்டு, நடு நிலவில் தெரு வழியே நடந்து செல்கிறேன். வாசல் கதவுகள், ஜன்னல் கதவுகள் திறக்கின்றன. சில மூடுகின்றன. சிலர் திண்ணைக்கு வந்து நிற்கின்றனர். சிலர் அன்பில் என்னை வழியனுப்புவது போலும், ஒரு தூரம் வந்து அங்கு நின்று விடுகின்றனர். நான் கண்ட இன்பம், பாடிக்கொண்டே போகிறேன். நான் என் இயல்பில் உணர்ச்சி பூர்வமானவன். பாடுவது அன்றி வேறு அறியேன். ஆனால் இவர்கள் மிக்க மிக்கப் படித்தவர்கள். இவர்கள் அறிவு ஜீவிகள். என் கீதத்துக்கு இலக்கணம் வகுப்பவர்கள். என் பார்வை உணர்ச்சி பூர்வமானது. அவர்களுடையது அறிவு பூர்வமானது. உணர்ச்சியும் அறிவும் இழைந்து ஏதோ தருணத்தில் ரஸவாதம் நிகழ்கையில்- அம்மா! உடல் சிலிர்க்கிறது, கலந்துரையாடல் என்ற பெயரில் ஆரம்பித்த இந்தச் சந்திப்பு, வெகு சீக்கிரமே அதன் சம்பாஷனைத் தன்மை ஒய்ந்து, என் குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். ஆனால், ப்ரவசன முறையிலோ, ப்ரசங்க முறையிலோ இல்லை. என்னுள் இதழ் இதழாக விரிந்து ஏதேதோ விஷயங்கள். எனக்கு ஏற்கெனவே தெரிந்தவை, இப்போது ஒரு புதுமை பெற்றவை. தெரிந்தவை, ஆனால் தெரியாதவை. தெரியாதவை, ஆனால் தெரிந்தவை. தெரிந்தும் தெரியாதவை, தெரியாமலே தெரிந்தவை. ஒரு மறையாகி- ஏதோ ஒரு முறையில் இவைகள் எனக்குள்ளி ருந்தும் எனக்குப் புறம்பானவை, தாம் வெளிப்பட நான் காரணமானேன்.