பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தைக்குத் ‘திருஷ்டி கழித்து’ விட்டால் அப்பொல்லாங்கு வராது என நம்பி அங்ஙனமே செய்கிறாள். இது தமிழ் நாட்டு மாதரிடம் மறைக்க முடியாத பழக்கமாக ஆகிவிட்டதால் புலவருலகத்திலும் உயர்ந்த இடம் பிடித்துவிட்டது. இதனை இலக்கியங்கள் கண்ணேறு கழித்தல்-என்று பேசுகின்றன. இப்பழக்கம் அரபு நாட்டிற்கும் சென்ற மாயந்தான் என்ன! நபிகள் நாயகம் ஷாம் நகரிலிருந்து திரும்பி மக்கமாநகர் வந்து சேருகிறார். அனைவருக்கும் ஒரேமகிழ்ச்சி நபிகளின் பெரிய தகப்பனார் அவரை ஆரத்தழுவி மகிழ்கிறார். ஆனால் நபிகளின் பெரிய தாயார் என்ன செய்கிறார் தெரியுமா? கண்ணிறை அயினி நீரால் கண்ணெச்சில் கழுவினார்கள்' பிள்ளையின் புகழ் உலகெங்கும் பரவி வருவது கண்டு, கண்ணேறு கழிப்பது இன்றியமையாதது என்பது அவருக்குத் தானே தெரியும்! அந்தத் தாய் அரபு நாட்டுத் தாய் என்றாலும் கவிஞர் தமிழ் நாட்டவர் ஆதலால் அவளும் தமிழ் நாட்டுத் தாயாகிறாள்!

அரபு நாட்டு நிகழ்ச்சியையே கூறப் புகுந்தது-அவ்வாறே கூறியது-சீறாப்புராணம் என்றாலும். அந்த உமறு கண்ட ‘சீறா’வில் ஒரு செந்தமிழ் நாடும் அதன் சீர்த்திமிகு பண்பாடும் பழக்க வழக்கங்களும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்னும் பேருண்மையை இதுகாறும் கூறியுள்ள செய்திகன் வலியுறுத்தி நிற்பதை நாம் நன்குணரலாம்.★