பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


விலைமகள் போன்று பலபல முகமாய்
வெள்ளரு வித்திரள் சாயும்"[1]

என்கிறார் உமறு.

கம்பர், சுருங்கிய வார்த்தைகளில் சொல்லியிருப்பதையே உமறு அவர்கள் இன்னும் விளக்கமான முறையில் கூறியிருக்கிறார். மலையிலே விளைவதாகிய சந்தனம், அகில், யானைத் தந்தங்கள் முதலியவைகளை அடித்துக் கொண்டு வரும் வெள்ளத்தை இவ்விரு கவிஞர்களும் வணிகருக்கு உவமித்துக் கூறியிருக்கின்றனர்.

"கிடந்த சந்தனம் காரகில் கிளைமணி கரிக்கோடு
உடைந்த முத்தம்வெண்தந்தமுச் சுடரொளி யொதுங்கக்
கடந்த செம்மணிப் பையுடன் கொடுகட லேற
நடந்த வாணிக னொத்தது செழுங்கழை நதியே."[2]

என்கிறார் உமறு.

"மணியும் பொன்னும் மயிற்றழைப் பீலியும்
அணியும் ஆனைவெண்கோடும் அகிலுந் தண்
இணையில் ஆரமும் இன்னகொண் டேகலான்
வணிக மாக்களை ஒத்தவ் வாரியே.”[3]

என்கிறார் கம்பர்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் உள்ள பொருள்களை அடித்துச் செல்லும் வெள்ளப் பெருக்கை அழகிய பல உவமைகளில் இவ்விரு கவிஞர்களும் பாடியிருக்கின்றனர். வெள்ளப் பெருக்கு எல்லா இடங்களிலும் பாய்ந்து, குளங்கள், வயல்களெல்லாம் நிறைகின்றன. இச்செயலுக்கு இவ்விரு கவிஞர்கள் கூறும் உவமையும் ஒன்றாகவே இருப்பது சுட்டத் தக்கது.


  1. 1. சீறா. விலாதத்துக் காண்டம்.நாட்டுப் படலம் 9
  2. 2. சீறா. விலாதத்துக் காண்டம். நாட்டுப் படலம் 12
  3. 3. கம்ப, பாலகண்டம் ஆற்றுப் படலம், பா. 19