பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


"தாதுரு சோலைதோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணற் றடங்கள் தோறும்
மாதவி வேவிப் பூக வனந்தொறும் வயல்க டோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே."[1]


என்கிறார் கம்பர், உடம்பு தோறும் உயிர் சென்று உலாவும் இதே உவமையை அமைத்து உமறுவும்,

"தடமும் ஏரியும் வாவியுங் கழனியும் சலசக்
கிடங்கும் எங்கனும் நிறைதரப் பெருகுகிலாவங்
குடம்பை யின் பல பேதமா கியசதா கோடி
உடம்பு தோறினும் உயிர் நின்ற நிலையினை ஒக்கும்"?[2]

என்று பாடுகிறார். இவ்வாறு இவ்விரு கவிஞர்களும் இயற்கையை இனிதுற வருணித்துக் கூறியிருப்பதும் ஒன்றே போல் அழகிய உவமைகளை அமைத்திருப்பதும் எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

பிற கவிஞர்களும் உமறுவும்

நற்றிணையில் முப்பத்தைந்தாம் பாடலில், அம்மூவனார் முறுவலை உண்டாக்கும் இயற்கை நாடகக் காட்சி ஒன்றினை காட்டுவர், நாவற்கனிகள் பல நீரில் மிதந்து வருகின்றன: நீரில் மிதந்து வரும் மலர்களில் உள்ள தேனை நக்கியபடி வண்டுகளும் வருகின்றன. நாவற்கனி உண்ண விழையும் நண்டு ஒன்று, நாவற்கனியும் வண்டும் உருவத்தில் ஒத்துத் தோன்றுவதால், கனியென்று வண்டைப் பிடிக்கிறது, நண்டின் பிடியில் சிக்குண்ட வண்டு ஓலமிட, அவ்வோசையைக் கேட்டுக் கரையில் காத்திருந்த இரைதேர் நாரை ஒன்று, பறந்து வந்து நண்டைப் பிடிக்க, நண்டு தன் பிடியிலிருந்து வண்டை விட்டுவிடுகிறது.



  1. 1. கம்ப, பாலகண்டம். ஆற்றுப் படலம் பா. 12
  2. 2. சீறா. விலாதத்துக் காண்டம், நாட்டுப் படலம் 17